

மும்பை கோடீஸ்வரர்களான கபில் மற்றும் தீரஜ் வாதவான் ஆகியோர் மீது பல மோசடி வழக்குகளில் விசாரணை இருந்து வருகிறது. இவர்களை மகாராஷ்டிரா மலைவாசஸ்தலத்தில் வைத்து போலீஸார் லாக்-டவுன் உத்தரவுகளை மீறி ஒன்று கூடி கொண்டாட்டம் போட்டதற்காகக் கைது செய்தனர்.
இவருடன் சுமார் 20 குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் என்று பண்ணை வீட்டில் கொண்டாட்டம் போட்டுள்ளனர். இவர்களுக்கு கடிதம் கொடுத்து லாக்-டவுன் கட்டுப்பாடுகளை மதிக்காமல் மீற உதவிய ஐபிஎஸ் அதிகாரி கடும் எச்சரிக்கையுடன் கட்டாய பணி விடுப்பில் அனுப்பப்பட்டார். இவர்கள் ரியல் எஸ்டேட் நிழல் நிதிமுதலீட்டாளர்கள் என்று அறியப்படுகிறது. டி.எச்.எஃப்.எல்., யெஸ் வங்கி விவகாரம் தொடர்பாக இவர்கள் மீது விசாரணை எழுந்தது.
இவர்கள் மற்றும் 23 பேர் மகாபலீஸ்வரர் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக ஒன்று கூடியுள்ளனர். உள்ளூர் வாசிகள் போலீஸாரிடம் இந்த பண்ணை வீட்டுக் கொண்டாட்டங்கள் குறித்து துப்பு கொடுக்க போலீஸார் அனைவரையும் அங்கேயே அடைத்து வைத்தனர்.
மும்பையிலிருந்து 250 கிமீ தூரம் வரை வாதவான் குடும்பத்தினர் பயணம் மேற்கொண்டனர். புதன் இரவு கார்களில் இவர்கள் சென்றுள்ளனர். ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் குப்தா, உள்துறை முதன்மை செயலர் இவர்களுக்கு பாஸ்களை வழங்கியுள்ளார். இது குறித்த அதிகாரப் பூர்வ கடிதத்தில் ’குடும்ப நெருக்கடி’ காரணமாக பாஸ்கள் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தைக் கொண்டு வருபவர்களை அனுமதிக்கவும் என்று அதில் கோரப்பட்டிருந்தது. வாதவான் குடும்பத்தினர் பண்ணை வீட்டுக்கு சமையல் காரர்களுடன் வேலைக்காரர்களையும் அழைத்துச் சென்றனர். அனைவர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சகோதரர்களான தீரஜ் வாதவான், கபில் வாதவான் ஆகியோர் மீது யெஸ் வங்கி மற்றும் டி.எச்.எஃப்.எல். மோசடி வழக்குகள் தொடர்பாக லுக்-அவுட் நோட்டீஸ்கள் உள்ளன.
இது பெரிய சர்ச்சையாக பாஜக, ஆளும் சிவசேனா கட்சியின் விளக்கத்தைக் கோரியுள்ளதோடு உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
இவர்களை தனிமைப்படுத்திய காலக்கட்டம் முடிந்தவுடன் சிபிஐ வாதவான் சகோதரர்களை கைது செய்யும் என்று தெரிகிறது.