

“நீதிமன்றத்தில் எங்கள் நிலையை விளக்குவோம். அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தால் மேல்முறையீடு செய்வோம்” என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அறிவித்தனர்.
ஆத் ஆத்மி கட்சியின் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெல்லியில் நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசியபோது, “அர்விந்த் கேஜ்ரிவால் ஜாமீன் பெறுவதற்கு பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜராவேன் என்று உத்தரவாதம் அளித்தால், பிணைப் பத்திரம் தேவையில்லை.
இது கட்சியின் கொள்கை முடிவு. எத்தனையோ ஏழைகள் பிணைப் பத்திரம் தாக்கல் செய்ய முடியாமல் சிறையில் வாடுகின்றனர். அவர்களுக்காக இந்த நிலையை எடுத்தோம். எங்கள் நிலையை நீதிமன்றத்தில் விளக்குவோம்” என்றார்.
அர்விந்த் கேஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான அவதுாறு வழக்கு வெள்ளிக்கிழமை மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. “நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்தால் மேல்முறையீடு செய்வோம்” என்று கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் கூறினார்.
ஆம் ஆத்மி கட்சியின் நிறுவன உறுப்பினர் சாந்தி பூஷண் கூறியபோது, “ஜாமீன் பெற பிணைப் பத்திரம் வழங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. ஏற்கனவே, நான்கு சந்தர்ப்பங்களில் பிணைப் பத்திரம் இல்லாமல் ஜாமீன் வழங்கப்பட்ட முன்னுதாரணங்கள் உள்ளன” என்றார்.
வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்தித்து அர்விந்த் கேஜ்ரிவால் சிறைக்குச் சென்றதன் பின்னணி குறித்து எடுத்துச் சொல்லவும் ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது.