

லாக்டவுன் காலத்தில் சொந்த ஊருக்கு சென்றுவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் கிராமத்திற்கு ஆற்றின் குறுக்கே நீந்திச் செல்லும் சாகசத்தில் ஈடுபட்டவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோக சம்பவம் கர்நாடகாவில் இன்று நடந்தது.
கடந்த மார்ச் 24 முதல் நாடு முழுவதும் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் சென்றனர். பேருந்திலும், டிரக்கிலும், லாரிகளிலும் பயணம் செய்தவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் வாகனங்கள் கிடைக்காமல் நடைபயணமாகவே ஊர் போய்ச் சேர்ந்தவர்களும் உண்டு. இதில் எதிலும் சேராமல், இருந்த இடத்திலேயே சிக்கிக் கொண்டவர்களும் உண்டு. ஆனால் ஒடிசா, பிஹார் போன்ற மாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவு, தங்குமிடம் போன்றவை அளிக்கப்பட்டு சிறந்த முறையில் ஆதரவளித்து வருகின்றன.
ஆனால் பாகல்கோட் மாவட்டத்தின் ஹங்குண்ட் தாலுகாவைச் சேர்ந்த மல்லப்பா பொம்மடி (41) யின் கதையே வேறு.
இவர் கடந்த வாரம் முன்பு விஜயபுரா மாவட்டத்தில் முடேபிஹால் தாலுகாவின் அமர்கோல் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு வந்திருந்தார். சில தினங்கள் அங்கு தங்கியிருந்த மல்லப்பா மீண்டும் தனது சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டுமென முடிவெடுத்தார். ஆனால் வாகனங்கள் ஏதும் இல்லாததால் நடந்தே ஊர் சென்றுவிடத் தீர்மானித்தவர் வழியில் ஆற்றைக் கடக்கவும் முடிவு செய்தார்.
இதுகுறித்து முடேபிஹால் காவல்நிலைய அதிகாரிகள் கூறியதாவது:
''வியாழக்கிழமை, மல்லப்பா தனது கிராமத்திற்குத் திரும்ப முடிவு செய்தார். ஆனால், கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள தங்காடகி பாலத்தில் அவர் நடந்துவரும்போதே போலீஸார் அவரைத் தடுத்தனர்.
லாக் டவுன் நேரத்தில் பயணம் செய்யத் தடை செய்யப்பட்டுள்ளதால் திரும்பிச் செல்லும்படி போலீஸார் அவரிடம் கூறினர். ஆனால் தடையையும் மீறி எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்த அந்த மல்லப்பா, போலீஸாரின் அறிவுறுத்தலை மீறி ஆற்றின் குறுக்கே நீந்த முடிவு செய்தார்.
அவர் ஆற்றில் குதித்து நீந்தத் தொடங்கினார், ஒரு சாகசம் போல சிறிது தூரம் அவர் நீந்திச் சென்றார். ஆனால் ஒரு கட்டத்தில் அவரால் நீந்த முடியவில்லை. ஆற்றின் நடுப்பகுதியில், அவர் தனது வலிமையை இழந்தார். நீந்த முடியாமல் நீரிலேயே மூழ்கிவிட்டார். அவரது உடல் பின்னர் மீட்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது''.
இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.