

நாட்டுக்குப் பெரும் அச்சறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வரை மக்களுக்குக் கிடைக்கும் அனைத்து மருத்துவச் சேவைகளையும் தேசியமயமாக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் அமித் திரிவேதி இந்த பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
''இந்தியாவில் பொதுச் சுகாதாரத் துறைக்கு போதுமான அளவு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காததால் இன்னும் குழப்பத்துடனும் இருக்கிறது. அதேசமயம் தனியார் துறையில் சுகாதாரத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது.
கரோனா வைரஸ் போன்ற பெருந்தொற்று நோயைச் சமாளிக்க போதுமான அளவு சுகாதாரக் கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. இறுதியாக, தனியார் துறையைத்தான் நாடியுள்ளது.
உலக அளவில் பல்வேறு நாடுகள் கரோனா வைரஸ் பெருந்தொற்று நோயை ஒழிக்கும் வரை தங்கள் நாட்டின் சுகாதாரத்துறையை தேசியமயமாக்கியுள்ளன. இந்த இக்கட்டான சூழலில், அனைத்து தனியார் மருத்துவமனைகளையும் தற்காலிகமாக தேசியமயமாக்கி, மருத்துவச் சேவைகள் அனைத்தும் சாமானிய மக்களுக்குத் தரமான சிகிச்சையையும், கவனிப்பையும் இலவசமாக வழங்கி, கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்தியாவில் உள்ள அனைத்து பொதுச் சுகாதாரத்துறையும் மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இல்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. இந்தச் சூழலில் செலவு செய்ய அரசிடம் பணமும் இல்லை என்றால் எப்படி மக்களுக்கு சிகிச்சை கிடைக்கும்?
2020-21 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் சுகாதாரத்துறைக்காக இந்தியா 1.6 சதவீதம் மட்டுமே ஒதுக்கியுள்ளது. அது ரூ.67 ஆயிரத்து 489 கோடி மட்டும்தான். இது உலக அளவில் குறைந்த வருமானம் உள்ள நாடுகளோடு ஒப்பிடும்போது, சராசரியான அளவு ஒதுக்கப்படும் மருத்துவத்துக்கான செலவோடு ஒப்பிட்டால் இது மிகக் குறைவாகும்.
இந்தியாவில் தனியார் மருத்துவத்துறை சிறப்பாக இருப்பதால் மருத்துவச் சுற்றுலாவுக்கு ஆண்டுதோறும் வெளிநாட்டினர் அதிக அளவு வருகிறார்கள். இதன் மூலம் அந்தத் துறை 200 சதவீதம் வளர்ந்துள்ளது.
ஆதலால், கரோனா வைரஸை எதிர்கொள்ள மக்களுக்குப் போதுமான அளவு மருத்துவ சிகிச்சை அளிக்க நாட்டில் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட அனைத்து மருத்துவச் சேவைகளையும் தற்காலிகமாக தேசியமயமாக்க உத்தரவிட்டு, மக்களுக்குக் கட்டணமின்றி சிகிச்சை வழங்கிட உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.