

21 நாட்கள் லாக் டவுன் என்று அறிவிக்கப்பட்டாலும் பட்டது சும்மா இருப்பவர்கள் கையில் சமூக ஊடகங்களும் சிக்கினால் என்ன ஆகும்? போலிச் செய்திகள் பரப்புவதே வேலையாகிவிடும்.
அப்படி வலம் வந்த வதந்தி அல்லது போலிச்செய்திகளில் ஒன்றுதான் மத்தியச் சுற்றுலா அமைச்சகம் ஹோட்டல்கள் மற்றும் உணவு விடுதிகளை அக்டோபர் 15ம் தேதி வரை திறக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது என்பதாகும்.
ஆனால் இந்தச் செய்தியில் உண்மையில்லை, அரசு செய்தி ஒலிபரப்பு நிறுவனமான பிரச்சார் பாரதி தனது ட்வீட்டில், தெள்ளத் தெளிவாக “இந்தச் செய்தி தவறானது. சமூகவலைத்தளத்தில் வலம் வரும் இந்தச் செய்தி போலியானது. சுற்றுலாத்துறை இதனை வெளியிடவில்லை” தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுதும் உணவு விடுதிகள் டைனிங்கை மட்டும் கைவிடத்தான் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவு விநியோகம் தடை செய்யப்படவில்லை, ஏனெனில் இது அத்தியாவசிய சேவைகளின் கீழ் வருவதாகும்.
21 நாட்கள் லாக்-டவுனுக்குப் பிறகு மக்களுக்காக உணவு விடுதிகள் திறக்கப்பட்டாலும் கரோனா பீதியில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் இதனால் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று விடுதி உரிமையாளர்கள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஹோட்டல்கள், உணவு விடுதிகள் பெரிய அளவிலான முறைசாரா பணியாளர்களைக் கொண்டதாகும்.
இந்நிலையில் இழந்ததை மீட்டு வர்த்தகத்தைப் பெருக்க விடுதி உரிமையாளர்கள் செலவைக் குறைப்பதற்காக வேலையைக் குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என்.ஆர்.ஏ.ஐ கணிப்பின் படி உணவு விடுதிகளின் மூலம் வேலையிழப்புகள் 1.5 மில்லியன் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.