Last Updated : 09 Apr, 2020 01:10 PM

 

Published : 09 Apr 2020 01:10 PM
Last Updated : 09 Apr 2020 01:10 PM

இறந்தவர்களுக்கு முஸ்லிம்கள் பிரார்த்தனை செய்யும் 'ஷபேப்-எ-ராத்': கரோனாவால் வீட்டிலேயே செய்துகொள்ள மவுலானாக்கள் வலியுறுத்தல்

இறந்தவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யும் முஸ்லிம்களின் நாளான ‘ஷபேப்-எ-ராத் (புனித இரவு)’ இன்று ஏப்ரல் 9 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதில் மசூதிகள், இடுகாடுகளுக்கு (கபரஸ்தான்) செல்லாமல் வீட்டில் இருந்தே பிரார்த்திக்கும்படி உத்தரப் பிரதேச மவுலானாக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

முஸ்லிம்களில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், சிறப்பு தொழுகையுடன் பிரார்த்தனை நடத்தும் நாளாக இருப்பது ஷபேப்-எ-ராத். இன்று தமிழகம் உள்ளிட்ட நாடு முழுவதிலும் அனுசரிக்கப்படுகிறது.

இந்நாளில் பெரும்பாலான முஸ்லிம்கள் தம் சொந்த, பந்தங்களில் மறைந்தவர்களை நினைவுகூர்வது உண்டு. இதில் சிலர் புத்தாடை அணிந்தும், சிறப்பு உணவு சமைத்து ஏழைகளுக்கு அளித்து தானும் உண்பதும் வழக்கம்.

ஷபேப்-எ-ராத்தின் பெரும்பாலான மசூதிகளில் இரவு நேர சிறப்புத் தொழுகைகளும் நடைபெறும். இதை நூற்றுக்கணக்கில் ஒன்றாகக் கூடி முஸ்லிம்கள் சிறப்புத் தொழுகை நடத்துவார்கள்.

பிறகு இவர்கள் தம் பகுதியின் இடுகாடுகளுக்குச் சென்று தம் குடும்பத்தில் இறந்தவர்களுக்காகப் பிரார்த்தித்து நினைவு கூர்வார்கள். இதற்காக, அனைத்து இடுகாடுகளிலும் பல வண்ண விளக்குகள் அமைத்து அலங்காரம் செய்து வைப்பதும் வழக்கமே. இதில் இரவு முழுவதிலும் முஸ்லிம் இளைஞர்களும், சிறுவர்களும் தூங்காமல் பண்டிகைக் காலம் போல் விழித்திருந்து கூட்டமாகக் கூடிக் கழிப்பதும் உண்டு.

இந்நிலையில், உலகம் முழுவதிலும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸில் இருந்து தப்ப இந்தியாவில் ஊரடங்கு அமலாகியுள்ளது. ஏப்ரல் 14-ம் தேதி வரை நீடிக்கும் இந்த ஊரடங்கால் குறிப்பிட்ட நேரம் தவிர எவருக்கும் வெளியில் செல்ல அனுமதி இல்லை.

இதனால், அனைத்து மதச் சடங்குகளையும் நிறுத்தி வைத்து, பிரபல புனிதப் பொது இடங்களும் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக மசூதிகளிலும் ஐந்து வேளை தொழுகை நிறுத்தப்பட்டு அவற்றில் பூட்டுகள் தொங்குகின்றன.

இந்த சூழலில் வரும் ஷபேப்-எ-ராத்திலும் முஸ்லிம்கள் வெளியில் வராமல் தம் வீடுகளினுள் பிரார்த்தனை மற்றும் தொழுகைகளை முடித்துக் கொள்ளும்படி உ.பி. மவுலானாக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஆக்ராவின் துணை காஜியான மவுலானா முகம்மது உஸைர் ஆலம் கூறும்போது, ''இந்த நாளின் சிறப்புத் தொழுகை, பிரார்த்தனையில் அனைவரது பாவங்களையும் எல்லாம் வல்ல இறைவன் மன்னிப்பார்.

தற்போது கரோனாவால் அமலான ஊரடங்கால் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே தொழுகை செய்ய வேண்டும். இதுபோன்ற காலங்களில் மசூதிகளிலும், கபரஸ்தான்களிலும் செல்வதில் இஸ்லாத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 8-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை டெல்லியின் நிஜாமுத்தீனில் இஸ்திமாக்களுக்காக கூடிய முஸ்லிம்களால் கரோனா பரவல் அதிகரித்ததாகப் புகார் உள்ளது. இந்த சூழலில் அடுத்து வரவிருக்கும் ஷபேப்-எ-ராத்திலும் அதுபோல் நடந்துவிடாமல் இருக்கும்படியான எச்சரிக்கையாக இது கருதப்படுகிறது.

எனினும், தப்லீக் ஜமாத் உள்ளிட்ட சில முஸ்லிம் பிரிவினர் இந்த 'ஷபேப்-எ-ராத்'தை கடைப்பிடிப்பதில்லை என்பது நினைவுகூரத்தக்கது.


FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x