கரோனா நோயாளியுடன் தொடர்பு: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 30 மருத்துவர்கள், செவிலியர்கள் தனிமை
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 72 வயது முதியவருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என 30 பேரைத் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதைத் தடுக்கும் முயற்சியில் மத்திய அரசோடு, மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசு 21 நாட்கள் லாக் டவுன் திட்டத்தைக் கொண்டுவந்து நடைமுறைப்படுத்தியுள்ளது.
டெல்லியில் இதுவரை 669 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு பக்கவாத பாதிப்புடன் 72 முதியவர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழு என்-எஸ் 5 வார்டில் உள்ள நரம்பியல் பிரிவுக்கு மாற்றக்கோரினார்கள்.
அந்த முதியவருக்கு அதன்பின் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன், எக்ஸ்ரே போன்றவை மற்ற நோயாளிகளுடன் அமரவைத்து எடுக்கப்பட்டது. அப்போது அந்த முதியவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து மூச்சு விட சிரமப்பட்டார். அதைப் பார்த்த மருத்துவர்கள், உடனடியாக அவருக்குச் சிகிச்சையளித்து ரத்தத்தை எடுத்துப் பரிசோதனைக்கு அனுப்பினர். பரிசோதனை முடிவில் அந்த முதியவர் கரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அந்த முதியவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வார்டுக்கு மாற்ற மருத்துவர்கள் உத்தரவிட்டனர்.
நரம்பியல் வார்டில் அந்த முதியவர் அனுமதிக்கப்பட்டிருந்த இடத்தில் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அவசரப் பிரிவு மருதுத்துவர்கள் வந்து அனைத்து நோயாளிகளையும் பரிசோதித்தனர்.
இப்போது, அந்த முதியவர் உடல்நிலை மோசமான நிலையில் இருப்பதால் அவரைத் தொடர் தீவிரக் கண்காணப்பில் மருத்துவர்கள் வைத்துள்ளனர். அந்த முதியவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் குழு, செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் என மொத்தம் 30 பேர் தங்கள் வீடுகளில் சென்று சுய தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டனர்.
