Published : 09 Apr 2020 10:10 AM
Last Updated : 09 Apr 2020 10:10 AM

கரோனா தனிமை மையங்களிலிருந்து இரவில் நழுவிச் சென்று பகலில் மீண்டும் வரும் தொழிலாளர்கள்: எங்கு செல்கிறார்கள்?

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்-டவுன் 16 நாட்களாக நீடித்து வரும் நிலையில் பல மாநிலங்களிலிருந்து வேலையின்மையினால் பிஹார் வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமப் பள்ளிகளிலும் பஞ்சாயத்து கட்டிடங்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சிலர் இரவு வேளைகளில் காணாமல் போய் பிறகு காலை வேளையில் தனிமை முகாம்களுக்குத் திரும்பும் மர்மம் என்னவென்று புரியாமல் அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

இவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இரவில் சேர்ந்து இருந்து விட்டு காலையில் தனிமை முகாம்களுக்குத் திரும்புவதாக கிராமத்தலைவர்கள் தரப்பில் ஐயம் எழுந்துள்ளது.

பிஹாரில் புலம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களுக்கென்று 3,115 அரசுப்பள்ளிகள் பஞ்சாயத்து கட்டிடங்கள் தனிமைப்படுத்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ளன. சுமார் 1.7 லட்சம் மக்கள் பிஹாருக்குத் திரும்பியுள்ளனர். இதில் 27,300 பேர் கரோனா அச்சத்தினால் இந்த இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இங்கு மின்சாரம், டாய்லெட் , படுக்கை வசதிகள் இல்லை என்று புகார் எழுந்துள்ளது. இதில் சானிட்டைசர்கள், முகக்கவசங்களுக்கு எங்கே போவது என்று தொழிலாளர்கள் கேட்டுள்ளனர்.

கிராமத்தலைவர்கள்தான் இவர்களை முகாமிலேயே இருக்கச் செய்ய வேண்டும், ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

பெயர் கூற விரும்பாத ஒரு கிராமத் தலைவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “இவர்களுக்கு நாளொன்றுக்கு 3 வேளை உணவு வழங்க முடிகிறது. இவர்களில் பலர் இரவில் தங்கள் குடும்பத்தினருடன் சேர்கின்றனர். காலையில் இலவச உணவுகளுக்காக மீண்டும் தனிமைப்பிரிவுக்கு வருகின்றனர்.” என்றார்

பல கிராமங்களில் உள்ள தனிமை மையங்களிலும் இதே கதைதான், இரவில் நழுவிவிட்டு பகலில் இலவச உணவுக்காக முகாம்களுக்கு வருகின்றனர். இலவச உணவினால் பகலில் வருகின்றனர், இல்லையெனில் இவர்கள் தனிமை மையங்களுக்கு வரவே மாட்டார்கள் என்கிறார் இன்னொரு கிராமத்தலைவர்.

குடிநீர் கிடையாது, சுத்தமான சூழல் இல்லை, நாற்றமெடுக்கும் இந்த தனிமை மையங்களில் யார்தான் இருப்பார்கள் என்கிறார் சிவான் மாவட்ட கிராமத் தலைவர் ஒருவர்.

இவர்களுக்கு உரிய வசதிகள் செய்து கொடுத்தால் இவர்கள் வெளியே செல்ல மாட்டார்கள். சில கிராமங்களில் மனைவிகளே இவ்வாறு இரவில் நழுவி வீட்டுக்கு வரும் கணவர்களை ஊக்குவிப்பதில்லை என்ற நிலவரமும் இருப்பதாக கிராமத்தலைவர்கள் தெரிவித்தனர்.

தனிமை மையங்கள் சுகாதாரத்துடன் மின்சாரம், குடிநீர், படுக்கை வசதிகளுடன் இருந்தால் இவர்கள் வெளியில் செல்ல மாட்டார்கள் என்கின்றனர் நிர்வாகிகள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x