மருத்துவர்களுக்கு மாற்றாகப் பேசும் ரோபா; கரோனா சிகிச்சைக்காக சத்தீஸ்கர் மாணவர் புது முயற்சி

கரோனா சிகிச்சையில் மருத்துவர்களுக்கு பதிலாக பணியாற்ற மாணவர் யோகேஷ் சாஹு, தயாரித்துள்ள பேசும் ரோபோ | படம்: ஏஎன்ஐ.
கரோனா சிகிச்சையில் மருத்துவர்களுக்கு பதிலாக பணியாற்ற மாணவர் யோகேஷ் சாஹு, தயாரித்துள்ள பேசும் ரோபோ | படம்: ஏஎன்ஐ.
Updated on
1 min read

உயிருக்கு ஆபத்தான நிலையில் கரோனா சிகிச்சையில் ஈடுபடும் மருத்துவர்களுக்கு மாற்றாக, பேசும் ரோபா ஒன்றை சத்தீஸ்கர் மாநிலப் பொறியியல் மாணவர் தயாரித்து வருகிறார்.

உலகெங்கும் கரோனா உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வேளையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களும் உயிரிழக்கும் அவலமும் ஏற்பட்டு வருகிறது. இந்தியாவில் 5000 பேருக்கு மேல் கரோனா வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலமடங்கு பெருகும் என்ற அச்சமே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனைக் கருத்தில் கொண்டு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவர் யோகேஷ் சாஹு, ஆபத்தான கரோனா சிகிச்சையில் மருத்துவர்கள் ஈடுபடுவதைக் குறைக்கும் வகையில் ரோபோ ஒன்றைத் தயாரித்துள்ளார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மகாசமுண்டில் பொறியியல் இறுதி ஆண்டு பயின்று வரும் மாணவர்.

ஏற்கெனவே ரோபோக்கள் கரோனா சிகிச்சையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை பெரும்பாலும் கரோனா நோயாளிகளுக்கு உணவு அளித்தல், மருந்து அளித்தல் போன்ற சேவை செய்யும் செவிலியர் பணிகளையே செய்து வருகின்றன.

இந்நிலையில், நோயாளிகளுடன் உரையாடி நோய்த்தன்மையை உள்வாங்கிக்கொண்டு அதற்கேற்ப மருந்துகளையும் மாத்திரைகளையும் அளிக்கும் வகையிலான ரோபோவை யோகேஷ் சாஹு உருவாக்கியுள்ளார்.

இதுகுறித்து சத்தீஸ்கர் மாணவர் யோகேஷ் சாஹு கூறியதாவது:

மக்களைக் காப்பாற்றுவதற்காக மருத்துவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்துள்ளனர். அவர்களுக்காக ஏதாவது செய்ய விரும்பினேன். அதன் சிறப்பு என்னவென்றால், நீங்கள் அதனுடன் பேசலாம்.

இதை எனது இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து உருவாக்கினேன். இதை உருவாக்க சுமார் 5000 ரூபாய் செலவு ஆனது. நாம் ரோபோவை நேரடியாக இணையத்துடன் இணைக்க முடியும். பின்னர் அதை எங்கிருந்தும் இயக்க முடியும். மருத்துவர்கள் அதனுடன் உள்ள கேமரா மூலம் நோயாளிகளுடன் தொடர்புகொண்டு அவர்களுக்கு ரோபோக்கள் மூலம் மருந்துகளை வழங்கும்படி வடிவமைத்துள்ளோம்.

இதை உருவாக்க யூடியூப் மூலம் கற்றுக்கொண்டேன். அடிப்படையில் நான் ஒரு நான் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்புத்துறை மாணவன் என்பதும் ரோபோவை உருவாக்க உதவியது.

மக்களுக்கு, குறிப்பாக மருத்துவர்களுக்கு உதவும் ரோபோக்களை உருவாக்க எங்களுக்கு மத்திய அரசும், மாநில அரசும் நிதி வழங்கினால் உதவியாக இருக்கும்’’.

இவ்வாறு யோகேஷ் சாஹு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in