லாக் டவுன் நீட்டிப்பு குறித்து இறுதி முடிவு: வரும் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

பிரதமர் மோடி : படம் | ஏஎன்ஐ
பிரதமர் மோடி : படம் | ஏஎன்ஐ
Updated on
1 min read

கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாட்டில் கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுனை நீட்டிப்பதா அல்லது பாதியளவு தளர்த்துவதா என்பது குறித்து வரும் 11-ம் தேதி மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின் இறுதி முடிவு எடுக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வந்தபின் 2-வது முறையாக பிரதமர் மோடி, காணொலி மூலம் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவத் துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி காணொலி மூலம் கடந்த 2-ம் தேதி ஆலோசனை நடத்தி, சூழல்களைக் கேட்டறிந்தார்.

இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள், அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.

பெரும்பாலான அரசிசயல் கட்சித் தலைவர்கள் லாக் டவுன் நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். சில கடினமான முடிவுகளை எடுப்பது அவசியம் என பிரதமர் மோடியும் கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான மாநில அரசுகள், தொற்றுநோய் மருத்துவ வல்லுநர்கள், நிபுணர்கள் ஆகியோர் தொடர்ந்து லாக் டவுனை நீட்டித்தால்தான் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளனர்.

வரும் 11-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக்குப் பின்புதான் லாக் டவுன் நீட்டிப்பு குறித்தும், எத்தனை நாட்கள் நீட்டிக்கப்படும் என்பது குறித்தும், ஏதேனும் விதிமுறைகள் தளர்வு இருக்கமா என்பதும் தெரியவரும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in