

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 80 சதவீத கட்சிகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின, எனினும் இதுபற்றி மாநில முதல்வர்களுடன் பேசி இறுதி முடிவெடுப்பதாக பிரதமர் மோடி கூறினார் என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் தெரிவித்தார்.
சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரை மையமாகக் கொண்டு பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கை தொடர்பாக மாநில முதல்வர்கள், அரசு அதிகாரிகள், மருத்துவ துறையினர் என பல தரப்பினருடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் வசதி மூலம் உரையாடி வருகிறார்.
இந்தநிலையில் அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வழியாக இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.
காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாய், சிவசேனா சார்பில் சஞ்சய் ரவுத், சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கோரியதாக தெரிகிறது. மேலும் ஊரடங்கு மற்றும் அதுதொடர்பாகவும், பொருளாதார இழப்புகளை சரி செய்வது பற்றியும் அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். தங்கள் கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.
இந்தக் கூட்டத்தில் நாடுமுழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளதால் ஏப்ரல் 14-ம் தேதி ஊரடங்கு உத்தரவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என பிரதமர் மோடி அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 80 சதவீத கட்சிகள் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தின. அனைத்துக் கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான பொதுமக்களும் இதையே விரும்புவதாகவும், தனக்கு இவ்வாறு தகவல் வந்துள்ளதாகவும் பிரதமர் மோடி கூறினார். எனினும் இதுபற்றி மாநில முதல்வர்களுடன் பேசி இறுதி முடிவெடுப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
என தெரிவித்தார்.