

கரோனா வைரஸ் பரவல் தடுப்பு காரணமாக நாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள லாக் டவுனால் தொழிற்சாலைகள், பெருநிறுவனங்கள், சிறு, குறுதொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கையும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மோசமாக, 1.6 சதவீதமாக வீழ்ச்சி அடையும் என்று அமெரிக்காவின் கோல்ட்மேன் சாஸ் பொருளதார ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது
அமெரிக்காவி்ன் கோல்ட்மேன் சாஸ் பொருளதார ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு இந்தியாவில் கொண்டுவரப்பட்ட பின் பொருளாதார வளர்ச்சி முடங்கியுள்ளது. பொருளாதாரச் சிக்கல்களைத் தீர்க்கவும் இந்திய எம்.பி.க்கள் அரசியல் தலைவர்கள் தீவிரமாகக் களத்தில் இறங்கவில்லை.
எந்தவிதமான பெருந்தொற்று நோய் இல்லாத சூழலில், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார வளர்ச்சி கடந்த நிதியாண்டில் 5 சதவீதமாகச் சரிந்தது. இப்போது கரோனா வைரஸ் தொற்று காரணமாக லாக் டவுனில் பொருளாதாரச் செயல்பாடுகள் முடங்கியதால் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும்.
கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதலாம் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மோசமாக இருக்கும் என்று பல்வேறு ஆய்வு நிறுவனங்கள் ஏற்கெனவே கருத்து தெரிவித்துள்ளன.
அரசின் கொள்கை ரீதியான ஆதரவு இருந்தாலும் கூட, எதிர்பார்ப்புகள் அதிகமாக இருந்து வருகின்றன. தேசிய அளவில் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு, வைரஸ் காரணமாக மக்களிடயே எழுந்துள்ள அச்சம் ஆகியவை பொருளாதார வளர்ச்சியில் மார்ச் மாதம் முடிந்த முதல் காலாண்டிலும், அடுத்த காலாண்டிலும் பெரிய சரிவை உண்டாக்கும் என நம்புகிறோம்.
நாங்கள் முதலில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2021-ம் நிதியாண்டில் 3.3 சதவீதம் வரை இருக்கும் என மார்ச் 22-ம் தேதி கணித்தோம். ஆனால், தொடர்ந்து நீடித்து வரும் சூழல்களைக் கணக்கிடும்போது கடந்த 1970, 1980 களிலும், 2009-ம் ஆண்டிலும் ஏற்பட்ட பெரும் சரிவைப் போன்று இந்த ஆண்டு ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக வீழ்ச்சி அடையும்.
இந்திய அரசியல் தலைவர்கள், எம்.பி.க்கள், ஆளும் கட்சியிடத்தில் பொருளாதாரத்தை மீட்க வேண்டும், வளர்ச்சிப் பாதைக்கு மேலே இழுக்க வேண்டும் என்பதில் ஆவேசமான செயல்பாடு குறைவாக இருக்கிறது. இதுவரை ரூ.1.75 லட்சம் கோடி நிதித்தொகுப்பும், ரிசர்வ் வங்கி 0.75 சதவீத வட்டிக்குறைப்பும் மட்டும் செய்து பொருளாதார வளர்ச்சி தூண்டப்பட்டுள்ளது.
ஜிடிபியில் 60 சதவீதம் இருக்கும் மக்களின் நுகர்வுப் பழக்கம் லாக் டவுனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சேவைத்துறையும் முடங்கியுள்ளது. கலாச்சாரத்துறை,பொழுதுபோக்குத் துறை 95 சதவீதமும், உணவகங்கள், விருந்து உபசரிப்புத் துறை, ரெஸ்டாரன்ட் 70 முதல் 80 சதவீதமும், கல்வித்துறை 60 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளன.
எங்களின் கணிப்பு நாட்டின் லாக் டவுனால் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பாதியளவு மட்டுமே கணித்துள்ளோம். லாக் டவுன் காலகட்டம் முடிந்து இயல்பு நிலை வரும்போதுதான் பொருளாதார வளர்ச்சி குறித்த முழுமையான தகவல் வரும்''.
இவ்வாறு கோல்டுமேன் சாஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.