

மும்பையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 64 பேர் உயிரிழந்த நிலையில், பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என்று மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் 80 ஆயிரத்திற்கும் மேலான உயிர் பலியை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ளது. இதுவரை இந்தியாவில் 5,194 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மும்பையில் 1000க்கும் மேற்பட்டவர்களைப் பாதித்துள்ள நிலையில் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் 20 சதவீத பாதிப்புகள் மகாராஷ்டிவிலேயே ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தில் முன்னெச்சரிக்கை, தடுப்பு நடவடிக்கைகள் மேலும் முடுக்கிவிடப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிராவில் அடுத்த இரண்டு வாரத்திற்கு ஊரடங்கை நீட்டிக்கும் திட்டமும் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:
''மும்பையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது மாநகராட்சியின் அதிகாரபூர்வ உத்தரவு.
முகக்கவசம் கட்டாயம் அணியும் உத்தரவை மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 188 ன் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்படுகிறார்கள்.
வீதிகள், மருத்துவமனைகள், அலுவலகங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில் எந்த நோக்கத்திற்காகவும், எந்தக் காரணத்திற்காகவும் வீட்டைவிட்டு வெளியே வரும் அனைத்து நபர்களும் முகக்கவசம் அல்லது துணி முகக்கவசம் அணிய வேண்டும்''.
இவ்வாறு மும்பை மாநகராட்சி தெரிவித்துள்ளது.