

உத்தர பிரதேசத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்டங்களை முழுமையாக மூடி சீல் வைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல இடங்களில் மக்கள் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றித் திரியும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இளைஞர்கள் காரணமின்றி வெளியே சுற்றுகின்றனர். இவர்களை காவல்துறையினர் கடிந்து கொள்ளும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்தநிலையில் உத்தர பிரதேசத்தில் கரோனா பாதிப்பு அதிகமுள்ள 15 மாவட்டங்களை முழுமையாக மூடி சீல் வைக்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி லக்னோ, நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா, ஷாரண்பூர், ஷாம்லி உள்ளிட்ட 15 மாவட்டங்கள் முழுமையாக மூடி சீல வைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கவும் அனுமதியில்லை. அனைத்து பொருட்களும் வீடுகளுக்கு நேரடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதற்காகவும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது என எச்சரிக்கப்பட்டுள்ளது. கரோனா சமூக பரவலாக மாறாமல் தடுக்க வேண்டிய தேவை இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உத்தர பிரதேச அரசு அறிவித்துள்ளது.