Last Updated : 08 Apr, 2020 02:54 PM

 

Published : 08 Apr 2020 02:54 PM
Last Updated : 08 Apr 2020 02:54 PM

தன் குடும்பத்தின் பசியிலும் பட்டினியிலும் கூட இ-ரிக்‌ஷாவில் உணவுப்பொட்டலங்களை ஏழைகளுக்கு விநியோகிக்கும் மாற்றுத் திறனாளி: குவியும் பாராட்டு

கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுதும் முழு அடைப்பு அமல்படுத்தப்பட்டதில் மாற்றுத் திறனாளி தேஜ் பஹதூர் யாதவ் (36) என்பவரின் குடும்பம் பட்டினியில் வாடத் தொடங்கியது. இவர் போலியோவால் பாதிக்கப்பட்டவருக்கு இ-ரிக்‌ஷா ஓட்டும் மாற்றுத் திறனாளி ஆவார்.

இவர் தற்போது தன் குடும்பத்தின் பசியைப் போக்கி வருவதோடு கஷ்டப்படும் நலிவுற்ற குடும்பத்தினருக்கு உணவு அளிக்கும் சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

“4-5 நாட்கள் என் குடும்பம் பட்டினியின் எல்லைக்குச் சென்று விட்டது. என் மனைவிக்குக் கூட என்னால் சோறு போட முடியவில்லை, அவரும் மாற்றுத் திறனாளிதான், மேலும் 2 குழந்தைகள் உள்ளனர், 4 வயது மகள், 6 வயது மகன்” என்றார் தேஜ் பகதூர் யாதவ்.

இந்நிலையில் கடந்த மார்ச் 27-ம் தேதி கோம்தி நகரில் உள்ள சமுதாய சமையல்கூடத்துக்குச் சென்று தன் குடும்பத்துக்காக அவர் உணவு வாங்கி வரச் சென்றார். அங்கு உள்ளூர் மக்களும் அரசு அதிகாரிகளும் உணவு விநியோகித்து வந்தனர்.

இதில் உணவை வாங்கிக் கொண்டு மற்றவர்கள் திரும்ப, தேஜ்பகதூர் யாதவ் மட்டும் அங்கேயே நின்று ஊழியர்களுடன் சேர்ந்து இவரும் உணவு விநியோகத்தில் ஈடுபட்டார்.

அந்த நாளை நினைவு கூர்ந்த கோமதி நகர் விரிவு மஹாசமிதி செயலர் உமா சங்கர் துபே கூறும்போது, “ஒரு காலில் அவர் முடியாமல் நின்று கொண்டிருந்த போது அவருக்குத்தான் கூடுதல் பொட்டலங்கள் தேவைப்படுகிறது என்று நினைத்தேன். ஆனால் அங்கு வரும் மற்ற மக்களுக்கும் தான் சேவை செய்கிறேன் என்றார். நான் தயங்கினேன், ஆனால் அவர் வற்புறுத்தினார். நான் ‘நீங்கள் என்ன செய்ய முடியும்’ என்றேன், அதற்கு அவர் இ-ரிக்‌ஷா உள்ளது அதில் உணவு விநியோகம் செய்கிறேன் என்றார், அனைத்தையும் விட தன் சேவைக்கு அவர் எதையும் பதிலீடாகக் கேட்கவில்லை என்பதுதான் விசேஷம்” என்றார்

அன்று முதல் தேஜ்பகதூர் யாதவ் பல ஏழைகளுக்கும் தன் இ-ரிக்‌ஷா மூலம் உணவு விநியோகிக்கும் மனிதாபிமான சேவையில் ஈடுபட்டு வருகிறார். காலை 10 மணிக்கு வருகிறார், தன் ரிஷாவை ரீசார்ஜ் செய்கிறார், பிறகு உணவுப்பொட்டலங்களுடன் கிளம்பி விடுகிறார்.

“என்னிடம் பணம் இல்லை, என்னால் நடக்கவும் முடியாது, ஆனால் என்னால் மின் ரிக்‌ஷா ஓட்ட முடியும். ஒரே சமயத்தில் 500 உணவுப்பொட்டலங்களைக் கொண்டு செல்கிறேன். மாலை வரை 1,500 உணவுப்பொட்டலங்களை விநியோகிக்கிறேன். என்னாலும் சமூகத்துக்கு உதவ முடியும் என்று நினைக்கும் போது திருப்தி ஏற்படுகிறது” என்றார்.

இவரது இந்த சேவை மனப்பான்மை தெரிந்தவுடன் பலரும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.

இவரது குடும்பத்தைப் பற்றி பாரபங்கி குடியிருப்புவாசியான துபே என்பவர் கூறும்போது, “இவரது தந்தை லக்னோ மேம்பாட்டு ஆணையத்தில் பாதுகாவலராக பணியாற்றி வந்தார் ஆனால் 2017-ல் அவர் இறந்தார். தேஜ் பகதூர் யாதவ்வின் தந்தைக்கு வந்த காப்பீட்டு தொகை அனைத்தையும் இவரது சகோதரர் சுருட்டிச் சென்று விட்டார், இவருக்கு ஒன்றுமே தரவில்லை. அதனால் இ-ரிக்‌ஷா ஓட்டுவதை தவிர தேஜ் பகதூருக்கு வேறு மாற்று வாழ்வாதாரம் எதுவும் இல்லை. தேஜ் பகதூர் டான் டான் என்று வேலைகளைக் கச்சிதமாகச் செய்ய கூடியவர், இவர் சமூகத்துக்கே ஒரு அகத்தூண்டுதல், லாக் டவுன் முடிந்தவுடன் இவரது சேவைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி மாற்றுத்திறனாளி பென்ஷன் அல்லது பிற நிவாரணம் வாங்கித் தர முடிவெடுத்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x