Published : 08 Apr 2020 01:59 PM
Last Updated : 08 Apr 2020 01:59 PM

அரசு விளம்பரங்களை நிறுத்தும் யோசனை; சோனியா காந்திக்கு தனியார் ரேடியோ நிறுவனங்கள் எதிர்ப்பு

அடுத்த 2 ஆண்டுகளுக்கு மத்திய அரசு விளம்பரங்கள் தருவதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்துள்ள ஆலோசனைக்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸின் சவால்களை எதிர்கொள்ள ஆலோசனைகளை தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று கடிதம் எழுதினார். அதில் 5 விஷயங்களை குறிப்பிட்டு அரசு சிக்கனமாக செயல்பட அறிவுறுத்தி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறுகையில் ‘‘அடுத்த 2 ஆண்டுகளுக்கு அரசு மற்றும் அரசு பொது நிறுவனங்களின் விளம்பரங்களை தொலைக்காட்சி, பத்திரிகைகள் மற்றும் இணைய தளங்களுக்கு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும்.

மக்களின் பொது சுகாதாரம் தொடர்பான கோவிட் 19 குறித்த விளம்பரங்களுக்கு விலக்கு அளிக்கலாம். விளம்பரங்களை தடை செய்வதன் மூலம் மத்திய அரசு செலவு ஆண்டுக்கு சராசரியாக செலவு செய்யும் ஆயிரத்து 250 கோடி ரூபாயை மிச்சப்படுத்தலாம். ( அரசும், அரசு பொது நிறுவனங்களும் இந்த தொகைக்கு இணையாகவோ அல்லது இதற்கு அதிகமாகவோ செலவு செய்யக் கூடும்.) இந்த தொகை கோவிட் 19 பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் சமூக பாதிப்புகளை குறைக்கும்.’’ எனக் கூறியிருந்தார்.

இதற்கு அகில இந்திய தனியார் ரேடியோ நிறுவனங்களின் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவை பொறுத்தவரை ரேடியோ என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு அவர்கள் மொழியில், அவர்கள் எண்ணத்துடன் தகவல்களையும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. இதுமட்டுமின்றி அரசின் திட்டங்கள், நிகழ்ச்சிகள், செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் தகவல்களையும் வழங்கி வருகின்றன.


கடந்த சில ஆண்டுகளாகவே ரேடியோ நிறுவனங்கள் பெரும் சரிவை சந்தித்து வருகின்றன. கடந்த 2 ஆண்டுகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக விளம்பர வருமானம் குறைந்துள்ளது. இந்த நிலையில் அரசு விளம்பரத்தையும் நிறுத்தினால் ரேடியோ நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x