

பிரதமர் நரேந்திர மோடிக்காக 2 ஆண்டுகள் வெறும் காலுடன் நடந்த பாஜக தொண்டர் ஒருவர், நேற்று பிரதமரை சந்தித்த பின் காலணி அணியத் தொடங்கினார்.
கடந்த 2013-ம் ஆண்டு பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டார். அப்போது, ராஜஸ்தான் மாநிலம், பைல்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த பாஜக தொண்டரான பல்வந்த் குமாவத், நரேந்திர மோடி பிரதமராகும் வரை செருப்பு அணிய மாட்டேன் என்று சபதமிட்டார். அத்துடன் கடந்த மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் வெறும் காலுடனே சென்று நரேந்திர மோடிக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெற்று, மோடி பிரதமராக பதவியேற்ற பிறகும் இவர் தனது சபதத்தை முடித்துக்கொள்ளவில்லை. பிரதமரை சந்தித்த பிறகே காலணி அணிவேன் என உறுதியாக கூறிவிட்டார்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் சென்றார். அப்போது பல்வந்த், பிரதமரை சந்திக்க பாஜக தலைவர்கள் ஏற்பாடு செய்தனர்.
இந்த சந்திப்பின்போது, “உடலை வருத்திக்கொள்ளும் வகையில் சபதமிடக் கூடாது என்று பல்வந்தை மோடி அன்புடன் கடிந்துகொண்டார். மேலும் நாட்டை நிர்மாணிக்கும் பணியில் ஆற்றலை செலவிடு மாறு அவருக்கு ஆலோசனை கூறினார்.
இதையடுத்து பல்வந்த் தனது சபதத்தை முடித்துக்கொண்டார். 2 ஆண்டுகளுக்குப் பின் காலணி அணிந்தபடி பிரதமருடன் அவர் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.