

கரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகனப் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளதால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றுமாசு பல மடங்கு குறைந்திருக்கிறது.
பஞ்சாபின் ஜலந்தர் பகுதியிலும் காற்று மாசு குறைந்திருப்பதால் தவுலதார் மலைத்தொடரின் எழில்மிகு தோற்றம் கண்ணுக்குதெரிகிறது. இதனால் உற்சாகமடைந்துள்ள ஜலந்தர்வாசிகள், தங்கள் வீடுகளில் இருந்து இந்தமலைத்தொடரின் பின்னணியில் ‘செல்பி’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
அதைப் போலவே பஞ்சாபிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் தூரத்திலுள்ள இமயமலைத் தொடர் தெளிவாகத் தெரிந்துள்ளது.
இதனிடையே டெல்லியில் ஊரடங்கு காரணமாக சில நாட்களாக தொடா்ந்து காற்றின்தரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
காற்று மாசுக்கு முக்கிய காரணமான பிஎம்.25, பிஎம் 10,என்ஓஎக்ஸ் ஆகிய காரணிகள்காற்றில் மிகவும் குறைந்து காணப்படுவது தெரியவந்துள்ளது.
மத்திய அரசின் சிஸ்டம் ஆப் ஏர் குவாலிட்டி அன்ட் வெதர் போர்காஸ்டிங் அன்ட் ரிசர்ச் (சபர்) இத்தகவலைத் தெரிவித்துள்ளது.
டெல்லியைப் போலவே மும்பை, புனே, அகமதாபாத் ஆகிய நகரங்களிலும் காற்று மாசு வெகுவாகக் குறைந்துள்ளது.
கரோனா வைரஸ் பிரச்சினையால் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாலும், வாகனப் போக்குவரத்து வெகுவாகக் குறைந்துள்ளதாலும் காற்று மாசு அதிக அளவில் குறைந்துள்ளது என சபர் மையம் தெரிவித்துள்ளது. - பிடிஐ