

ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வருமா என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது என ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கத்தார் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. மதக்கூட்டங்கள், சமூக கூட்டங்கள் என அனைத்திற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்தும் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இறுதி வரை விமானப்போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. இதனால் பயணிகள் விமானங்கள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14-ம் தேதி முடிவுக்கு வந்தாலும் கூட உடனடியாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வாய்ப்பில்லை. அதற்கு அனுமதியும் தரப்படாது. ஒருபுறம் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
எனவே ஏப்ரல் 14-ம் தேதிக்கு பிறகு ஊரடங்கு முடிவுக்கு வருமா என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. அதுபோலவே ஊரடங்கு தொடருமா என்பது பற்றியும் இப்போது கூற முடியாது. மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஹரியாணா மாநிலத்தில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இவ்வாறு மனோகர் லால் கட்டார் கூறினார்.