

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று 4-வது நாளாக நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவிவேதி வாதாடியதாவது:
குற்றவாளிகளுக்கு வழங்கப் பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கவோ அல்லது மன்னித்து விடுதலை செய்யவோ மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது.
இதற்கு நீதிமன்றம் தடை போட்டால், அரசியல் சட்ட பிரிவு 21-ன்படி வழங்கப்பட்டுள்ள வாழ்வுரிமையை மறுப்பது போலாகும்.
தண்டனையை குறைத்தல் அல்லது தண்டனை யை நிறுத்தி வைத்தல் ஆகியவை வாழ்வதற்கான அடிப்படை உரிமையில் ஒரு பகுதிதான். இதில் எந்த நம்பிக்கைக்கும் வாய்ப்பில்லை என்றால், அது அடிப்படை உரிமையை மீறியதாகும். இவ்வாறு ராகேஷ் திவிவேதி வாதாடினார்.
இந்த வழக்கில் குற்றவாளிகள் ஏற்கெனவே 2 முறை தண்டனை குறைப்பு பெற்றுள்ளனர். அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு அதிகாரத்தை பயன்படுத்த முடியுமா என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.