

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்ப் பரவலில் இந்தியா இன்னும் 2-ம் கட்டத்தில் இருந்தாலும், நாட்டின் சில இடங்களில் சமூகப் பரவல் தொடங்கிவிட்டது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா எச்சரித்துள்ளார்.
உலக சமூகத்தை ஆட்டிப் படைத்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவையும் மிரட்டி வருகிறது. கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், கடந்த 24 மணிநேரத்தில் கூடுதலாக 354 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணி்க்கை 4 ஆயிரத்து 421 ஆக அதிகரித்துள்ளது. ஒரேநாளில் 5 பேர் இறந்ததையடுத்து, பலியானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.
இன்னும் இந்தியா 2-ம் கட்டத்தை விட்டு நகரவில்லை என்று பெரும்பாலான மருத்துவ வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்தபோதிலும், எம்ய்ஸ் இயக்குநர் கூறியுள்ள கருத்து சற்று அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குநர் ரன்தீப் குலேரியா நேற்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியுள்ளதாவது:
''உலக நாடுகளில் கரோனா வைரஸ் பாதிப்பைப் பார்க்கும்போது இந்தியாவின் சூழல் இன்னும் சிறப்பாகவே இருக்கிறது. ஆனால் கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், நாட்டில் சில இடங்கள் ஹாட் ஸ்பாட்களாக அதாவது சமூகப்பரவல் இடமாக மாறிவிட்டது.
நாம் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்தினால்தான் நாம், கரோனா வைரஸில் 2-ம் இடத்திலேயே இருக்க முடியும். அதனால் சமூகப் பரவல் தொடங்கி இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அங்கு அதிகமான சோதனைகள் நடத்தி பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு பிரித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
2-ம் கட்டத்தில் பாதி்க்கப்படுவோர் எண்ணிக்கை என்பது குறைவாகத்தான் இருக்கும். கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலம் பாதிப்பு ஏற்படும். அவர்களால் மற்றவர்களுக்கு ஏற்படும். ஆனால், 3-ம் கட்டம் என்பது பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு வைத்திருக்கும் அனைவருக்கும் கரோனா வைரஸ் பரவும்.
3-ம் கட்டத்தில் வைரஸ் எங்கிருந்து பரவுகிறது, யார் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டறிய முடியாது. மிக வேகமாகப் பரவும். அதி்கமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஆனால் நாம் இப்போது 2-ம் கட்டத்துக்கும் மூன்றாம் நிலைக்கும் இடைப்பட்ட இடத்தில் இருக்கிறோம். இந்த லாக்-டவுனை முறையாகப் பயன்படுத்தினால்தால் நாம் இருக்கும் இடத்தை தக்கவைக்க முடியும். அதலால் மக்கள் லாக்-டவுன் நேரத்தில் வீட்டுக்குளே இருந்து கரோனா வைரஸ் பரவும் சங்கிலித் தொடரை உடைக்க வேண்டும்''.
இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.