

டெல்லி, மகாராஷ்டிரா, தமிழகம்,கேரளா, தெலங்கானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஆந்திரா, மத்தியபிரதேசம், கர்நாடகா மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களில் தொடக்கம் முதலே கரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக உள்ளது. டெல்லி நிஜாமுதீன்பகுதியில் நடந்த முஸ்லிம் மதபிரார்த்தனைக்கு பிறகு இந்தமாநிலங்களின் கரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
இம்மாநிலங்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இதுவரை பதிவான கரோனா வைரஸ் தொற்றில் மேற்கண்ட மாநிலங்களில் பரவியுள்ள புள்ளி விவரத்தின்படி இது 86 சதவீதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்ஆயிரம் பேருக்கு பரவிய போதும் இந்த 11 மாநிலங்களில் 81.54 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். அடுத்ததாக 2 ஆயிரத்தை கடந்தபோதும் இந்த 11 மாநிலங்களில் 85.21 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 3 ஆயிரத்தை கடந்த போதும் மேற்கண்ட 11 மாநிலங்களில் இது 84.33 சதவீதமாக தொடர்ந்தது. தற்போது 4 ஆயிரத்தை தாண்டிய கரோனா பாதிப்பிலும் மேற்கண்ட 11 மாநிலங்களிலேயே அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கணக்கெடுப்பின்படி நாட்டில் மொத்தம் 275 பேர் கரோனா தொற்றிலிருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் மேற்கண்ட 11 மாநிலங்களில் 218 பேர் உள்ளனர். அதன்படி பார்த்தால், இந்த 11 மாநிலங்களில் மட்டும் உடல்நலம் குணமானவர்கள் 79.27 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.