Published : 07 Apr 2020 07:31 AM
Last Updated : 07 Apr 2020 07:31 AM

மாநாடு நடத்தக்கூடாது என்ற ஆலோசனையை தப்லீக் ஜமாத் தலைவர் புறக்கணித்தார்- முஸ்லிம் தலைவர்கள் குற்றச்சாட்டு

ஆலோசனைகளைப் புறக்கணித்து டெல்லி தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத் மாநாட்டை நடத்தினார் என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்தியாவில் நடைபெறும் இஸ்லாமிய மத ஆலோசனை கூட்டங்களில் கலந்து கொள் பவர்கள் 'தப்லீக் ஜமாத்தார் (மதப் பிரச்சாரகர்கள்)’ என்றழைக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு 'மர்கஸ்’ எனும் பெயரில் டெல்லி நிஜாமுதீன் தர்கா அருகே தலைமையகம் அமைந்துள்ளது.

கடந்த மார்ச் 15-ம் தேதி டெல்லி நிஜாமுதீனில் மத ஆலோசனை மாநாடு நடைபெற்றது. இதில் சவுதி அரேபியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் பங்கேற்றுள்ளனர். தமிழகம், ஆந்திரா, தெலங்கானா உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பெரும்பாலானவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரில் சுமார் 30 சதவீதம் பேருக்கு டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டால் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த மாநாடு காரணமாக 17 மாநிலங்களுக்கு வைரஸ் பரவியுள்ளது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு காரணமாக கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டெல்லி தப்லீக் ஜமாத் மாநாடு தொடர்பாக தற்போது புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மாநாட்டை நடத்த வேண்டாம் என்று முஸ்லிம் மதத் தலைவர்கள் தப்லீக் ஜமாத் தலைவர் மவுலானா முகமது சாத்திடம் அறிவுறுத்தியுள்ளனர். அவர்களின் ஆலோசனையை புறக்கணித்த முகமது சாத் மாநாட்டை நடத்தி, கரோனா வைரஸ் பரவலுக்கு முக்கிய காரணியாக மாறி உள்ளார்.

டெல்லியில் உள்ள மற்றொரு முஸ்லிம் மதப் பிரிவான ஷுரா இ ஜமாத், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளது. ஆனால் ஆலோசனைகளை புறந்தள்ளி தப்லீக் ஜமாத் மாநாட்டை முகமது சாத் நடத்தியுள்ளார்.

இதுகுறித்து தப்லீக் ஜமாத்தின் ஆதரவாளர் முகமது ஆலம் கூறும்போது, "மெக்கா, மெதீனாவுக்கு அடுத்தபடியாக டெல்லி மர்கஸை முஸ்லிம்கள் புனிதத் தலமாக கருதுகின்றனர். கரோனா வைரஸ் அச்சுறுத்தல் குறித்து முகமது சாத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனால் தனது பிடிவாதத்தால் மாநாட்டை நடத்தி அப்பாவி முஸ்லிம்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட செய்துள்ளார்" என்று குற்றம் சாட்டினார்.

முகமது சாத்துக்கு நெருக்க மான முஸ்லிம் மதத் தலைவர் ஒருவர் கூறும்போது, "மாநாட்டை ரத்து செய்யுமாறு நாங்கள் கூறிய ஆலோசனையை முகமது சாத் புறக்கணித்துவிட்டார். ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் அவர் மிகப்பெரிய அவப்பெயரை ஏற்படுத்திவிட்டார்" என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் மீம் அப்சல் கூறும்போது, "மாநாட்டை ரத்து செய்யுமாறு பல்வேறு முஸ்லிம் மதத் தலைவர்கள் முகமது சாத்திடம் வலியுறுத்தினர். ஆனால் அவர் வேண்டுமென்றே மாநாட்டை நடத்தினார்" என்று குற்றம் சாட்டினார்.

முகமது சாத்தும் அவரது ஆதரவாளர்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்களை டெல்லி போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x