

டெல்லியில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ள காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் சபீர் ஷாவுக்கு அமலாக்கத் துறை புதிதாக ஒரு சம்மன் பிறப்பித்துள்ளது.
ஹவாலா மூலம் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி வழங்கியதாக கடந்த 2005-ல் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த சம்மன், தெற்கு டெல்லி விருந்தினர் இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இங்குதான் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக சுதந்திர கட்சியின் தலைவரான சபீர் ஷா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக, டெல்லிக்கு வர திட்டமிட்டிருந்த பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் ஆசிஷை சந்திப்பதற்காக சபீர் ஷா நேற்று முன்தினம் டெல்லி வந்தார். அப்போது டெல்லி போலீஸார் அவரை கைது செய்து வீட்டுக் காவலில் வைத்தனர்.
அமலாக்கத் துறையின் டெல்லி மண்டல அலுவலகத்தில் இந்த வாரத்தில் நேரில் ஆஜராகுமாறு அந்த சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில், ஹவாலா தரகராகக் கருதப்படும் முகமது அஸ்லாம் வானியை டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு கடந்த 2005-ல் கைது செய்தது. ஷாவுக்கு ரூ.2.25 கோடி வழங்கியதாக வானி விசாரணையின்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து ஷாவுக்கு 2 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. அதேநேரம் இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது என ஷா கூறியிருந்தார். இந்நிலையில் 3-வது முறையாக அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இப்போது ஜாமீனில் வெளியில் உள்ள வானிக்கும் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி உள்ளது.