

உலக அளவில் இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு ஏற்படக் காரணம் சில மதகுருமார்களும், முல்லாக்களும்தான் என்று பாலிவுட் இயக்குநர் அப்பாஸ் டைர்வாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
'ஜானே து யா ஜானே நா' படத்தின் இயக்குநர், 'வார்', 'பேங் பேங்', 'முன்னாபாய் எம்பிபிஎஸ்' உள்ளிட்ட படங்களின் வசனகர்த்தா அப்பாஸ் டைர்வாலா. பாலிவுட்டில் இவர் பிரபலமான கதாசிரியர், இயக்குநர். தனது படைப்புகளுக்காக நிறைய விருதுகளையும் பெற்றுள்ளார்.
கோவிட்-19 தொற்றால் தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற எண்ணற்ற பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாநாட்டை நடத்தியவர்கள் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளனர். வழக்கம் போல இந்த விஷயமும் இணையத்தில் இரு மதத்தினரிடையே பெரிய வாக்குவாதமாக உருவெடுத்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் அப்பாஸ் டைர்வாலா தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நிலவி வரும் பிரச்சினை குறித்து, மதகுருமார்களை கடுமையாகச் சாடிப் பதிவிட்டுள்ளார்.
அதன் தமிழாக்கம் பின்வருமாறு:
''தீவிர இஸ்லாம் மதகுருமார்கள்தான் இஸ்லாமியர்கள் எல்லா இடங்களிலும் வெறுக்கப்படுவதற்கான காரணமாக எப்போதும் இருக்கிறார்கள். நானும் கூட அவர்கள் உமிழும் அபத்தத்தையும், பரப்பும் பிற்போக்கு மனப்பான்மையையும், கிபி 700க்குப் பிறகு யோசிக்காமல் போனதற்கும் வெறுக்கிறேன்.
என் விஷயத்தில், நான் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் அவர்கள் மீது இருக்கும் வெறுப்பை ஒழுங்காக வகைப்படுத்தி, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சராசரி இஸ்லாமியரிடம் சீர்திருத்தம் வேண்டும் எனத் தூண்ட முடிகிறது. ஆனால் மற்றவர்களிடம் அதை எப்படி என்னால் எதிர்பார்க்க முடியும்? அவர்கள் ஏன் இது பற்றிக் கவலைப்பட வேண்டும்?
மதகுருமார்கள் அந்த மத சமூகத்துக்குப் பிரதிநிதியாக இருக்கிறார்கள். நிறைய முல்லாக்கள் இன்னமும் தீவிரமான தனித்தன்மையை நம்புகிறார்கள். (அதாவது) ஒன்று நீங்கள் இஸ்லாமியர், இல்லையென்றால் நீங்கள் தாழ்ந்தவர். காஃபிர். உங்களை மதமாற்றிக் காப்பாற்ற வேண்டும். இல்லையென்றால் மரணத்துக்குப் பின் உங்களுக்கு என்ன ஆகும் என்று நாங்கள் அறிவித்துக்கொண்டே இருப்போம்.
பெரும்பாலான ஜமாத்களில், மதகுருமார்களின் நிலைப்பாடு இதுதான். இதை யாரும், ஏன் மிதமான, மதச்சார்பற்ற இஸ்லாமியர் ஒருவரால் கூட மறுக்க முடியாது. இதுதான் பிரச்சினைகளின் வேர். இது வெறும் இஸ்லாமஃபோபியா கிடையாது. (மறுக்கக்கூடாத) இஸ்லாமியக் கொள்கை, பயங்கள் மற்றும் பித்துகளுக்கான எதிர்வினை. இது விரைவில் காணாமல் போகும் என்று தெரியவில்லை.
இந்தக் கிருமி அல்லாவின் தண்டனை என்று தலைவர்கள் பேசிய வீடியோக்களை மறக்காதீர்கள். எனவே மர்காஸ் பிரச்சினை நடக்கும்போது, இந்த முரணைப் பார்த்து எனது எதிர்வினையேகூட ஒருவித கொடூரமான மகிழ்ச்சியே. ஏற்கெனவே பயத்தில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பை வைத்து அரசியல் ரீதியாக முதன்மைபெறும் ஒரு தேசம் ஏன் கடுமையாக எதிர்வினையாற்றக்கூடாது?
முல்லாக்கள் நமக்காக பேசும் வரை, பழமைவாதங்களைப் பேசும் வரை, 'எல்லா முஸ்லிம்களும் அல்ல' என்ற வாதம் பற்றி யாரும் கவலைப்பட மாட்டார்கள். உள்ளிருந்தே வெறுப்பைக் கக்குபவர்களுக்கு எதிராக எழுந்து நிற்க முடியவில்லையென்றால் வெளியிலிருந்து வெறுப்பவர்களை எதிர்த்து நிற்க முடியாது.
மிதமான, ஆழமான மதச்சார்பின்மை உடைய, நவீன இஸ்லாமியத் தலைமை வந்து, காலாவதியான சிந்தனைகளைப் பேசும் இவர்களை வெளியேற்றும் வரை, நாம் - அவர்கள் என்ற கதை தொடரும்.
'நாங்கள்' என்று நாம் நம்மை நினைக்கும் வரை, 'அவர்கள்' என்றே ரீதியிலேயே நடத்தப்படுவோம்''.
இவ்வாறு அப்பாஸ் டைர்வாலா தெரிவித்துள்ளார்.
அப்பாஸின் இந்தப் பதிவு வைரலாகி ஆயிரம் முறைக்கு மேல பகிரப்பட்டுள்ளது. அவரது ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகின்றனர்.