

நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நோயால் 4 ஆயிரத்து 67 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,445 பேர் தப்லீக் ஜமாத் அமைப்போடு தொடர்புடையவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் ஊடகங்களுக்கு இன்று பேட்டி அளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, ''கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 67 ஆக இருக்கிறது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 109 ஆக இருக்கிறது. இதில் தப்லீக் ஜமாத் அமைப்போடு தொடர்புடையவர்கள் மட்டும் 1,445 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து 693 பேர் புதிதாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளnar. 30 பேர் இறந்துள்ளனர். இதில் கரோனா நோயால் ஆண்கள் 73 சதவீதமும், பெண்கள் 27 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் 63 சதவீதம் பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான்.
சமூகப் பரவல் ஏதும இல்லை. ஆனால், எம்ய்ஸ் இயக்குநர் கூற்றுப்படி உள்ளூர் சமூகப்பரவல் என்பதை விளக்கினால், ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் அதிகமான மக்கள் கரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்” என்று லாவ் அகர்வால் தெரிவித்தார்.
ஆனால், பிடிஐ செய்தி நிறுவனத்தின் கணக்கெடுப்பின்படி கரோனா வைரஸால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 126 ஆகவும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,111 ஆகவும், 315 பேர் குணமடைந்து சென்றதாகவும் தெரியவந்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சலீலா ஸ்ரீவஸ்தவா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், “டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் தொடர்பில் இருந்தவர்கள் என மொத்தம் 25 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஹரியாணா மாநிலத்தில் 5 கிராமங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த கிராமங்களில் உள்ள பலர் தப்லீக் ஜமாத்தில் உறுப்பினர்களாவும், மாநாட்டில் பங்கேற்றதாலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதுதவிர தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டவர்கள் 2,083 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டு அவர்களில் 1,703 பேர் கருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து நோயாளிகளுக்கம் மருந்துகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் ஆகியவை எந்த விதமான தடங்கல் இல்லாமல் செல்ல வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்’’ எனத் தெரிவித்தார்.