

டெல்லி நிஜாமுதீனில் தப்லீக் ஜமாத் மத வழிபாடு மாநாடு நடத்துவதற்கு யார் அனுமதியளித்தது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள சர்வதேச தப்லீக் ஜமாத் சார்பில் மார்ச் மாதத் தொடக்கத்தில் மாநாடு நடந்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்ளிட்ட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் பாதிப்பைக் குறைக்க மத்திய அரசு 21 நாட்கள் லாக்-டவுனை அமல்படுத்திய பின்பும் தப்லீக் ஜமாத் அலுவலகத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தது.
இவர்களை வெளியேற்றியபோது நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமானோருக்கு கரோனா அறிகுறி இருந்ததும், பலருக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் சென்றுவிட்டதால் அவர்களைத் தேடும் பணியும் முடுக்கி விடப்பட்டது.
கடந்த 4 நாட்களில் மட்டும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 400க்கும் மேற்பட்டோர் தப்லீக் ஜாமாத்தைச் சேர்ந்தவர்கள். இதுவரை 15 பேர் தப்லீக் ஜமாத்துக்குச் சென்றதால் இறந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்றவர்கள் இருப்பதால், அவர்களைத் தேடி வருகின்றனர். இதனால் அந்த மாநிலத்திலும் கடந்த 3 நாட்களில் பாதிப்படைந்தோர் எண்ணிக்கையும் 600க்கு மேல் அதிகரித்தது, உயிரிழப்பும் 50 பேரைக் கடந்தது
இந்த சூழலில் தேசியவாதக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஃபேஸ்புக்கில் தொண்டர்களுடனும், மக்களுடன் உரையாடினார். அப்போது தப்லீக் ஜமாத் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சரத் பவார் கூறுகையில், “ தப்லீக் ஜமாத் அமைப்பு மகாராஷ்டிராவில் இதேபோன்று மாநாடு நடத்த அனுமதி கேட்டது. அதாவது, மும்பை அருகே ஓர் இடத்திலும், சோலாப்பூர் மாவட்டத்திலும் நடத்திக்கொள்ள அனுமதி கேட்டது. ஆனால், இரு இடங்களிலும் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் மும்பையில் மக்கள் கூடுதவதற்கும் முன்கூட்டியே போலீஸார் மறுத்ததுடன், சோலாப்பூரில் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்கள். மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக் ஆகியோர் இந்த முடிவை எடுக்கும்போது, டெல்லியில் இந்த மாநாட்டை நடத்த யார் அனுமதி அளித்தது?
அதேசமயம், தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குத் தேவையில்லாமல் ஊடகங்கள் அதிகமாக கவனம் செலுத்துகின்றன. நம்முடைய தேசத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தொடர்ந்து கண்காணிப்பது தேவையில்லாதது” எனத் தெரிவித்தார்.