

மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் உயிரிழப்பு எதுவுமில்லை என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பால்கர் மாவட்டத்தில் துண்டல்வாடியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இப்பகுதியைப் பொறுத்தவரை இது புதிதல்ல. சென்றவாரம்கூட துண்டல்வாடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. பால்கரின் தஹானு பகுதி நவம்பர் 2018 முதல் இத்தகைய அதிர்வலைகளை அடிக்கடி சந்தித்து வருகிறது. அவற்றில் பெரும்பாலானவை துண்டல்வாடி கிராமத்தை மையமாகக் கொண்டுள்ளவையாகும்.
திங்கள்கிழமை அதிகாலை ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் குறித்து தானே மாநகராட்சியின் பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவுத் தலைவர் சந்தோஷ் கதம் கூறுகையில், ''துண்டல்வாடி கிராமத்தில் அதன் மையப்பகுதியுடன் 3.1 ரிக்டர் அளவிலான நடுக்கம் அதிகாலை 12.15 மணியளவில் உணரப்பட்டது. இந்நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. சொத்துசேதமும் ஏற்படவில்லை'' என்றார்.