Published : 06 Apr 2020 01:08 PM
Last Updated : 06 Apr 2020 01:08 PM

ஊரடங்கு; மக்களின் பொறுப்புணர்வு மெய்சிலிர்க்கச் செய்கிறது: பிரதமர் மோடி பெருமிதம்

கரோனாவுக்கு எதிரான போராட்டம் போரை விட குறைவானது அல்ல. எனவே பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு போதிய நிதி அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பாஜக 1980-ம் ஆண்டு இதேநாளில் தொடங்கப்பட்ட நிலையில் அக்கட்சியின் 40-ம் ஆண்டு நிறுவன நாள் தினத்தை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில் பாஜகவின் 40-வது நிறுவன நாள் தினத்தையொட்டி பிரதமர் மோடி கட்சித் தொண்டர்களிடம் வீடியோ காட்சி மூலம் உரையாற்றினார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

கரோனா வைரஸ் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அதனை உலகமே எதிர்த்து போராடி வருகிறது. இந்திய மக்கள் இந்த போராட்டத்தில் தங்கள் ஒற்றுமையை மீண்டும் நிருபித்துள்ளனர். ஊரடங்கு காலத்தில் மக்கள் காட்டி வரும் பொறுமை மற்றும் பொறுப்புணர்வு இதுவரை இல்லாத ஒன்றாகும். அனைவரையும் மெய்சிலிர்க்கச் செய்கிறது

அத்தியாவசிய தேவைகளை தவிர மற்றவற்றை தவிர்த்து மக்கள் காட்சி வரும் அணுகுமுறை அளப்பரியது. ஊரடங்கு காலத்திலும் தீபங்களை ஏற்றி அவர்கள் காட்டிய உணர்வு நமது ஒற்றுமைக்கு சாட்சியாகும்.

கடந்த காலத்தில் போர்கள் நடந்தபோது நமது தாயும் சகோதரிகளும் தங்களிடம் இருந்த தங்க நகைகளை தந்ததாக வரலாறு உண்டு. தற்போது கரோனாவுக்கு எதிரான போராட்டமும் போரை விட குறைவானது அல்ல. இது மனித குலத்தை காப்பதற்காக போர்.

எனவே பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் பிரதமர் நிவாரண நிதிக்கு போதிய நிதி அளிக்க வேண்டும். தாங்கள் மட்டுமின்றி ஒவ்வொருவரும் தங்கள், நண்பர்கள், உணவினர்கள் என தலா 40 பேரை பிரதமர் நிவாரண நிதிக்கு நிதியளிக்க உந்துதலாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x