

வல்லபாய் படேல் சிலையை விற்பனை செய்வதாக கூறி விஷமி ஒருவர் ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்துள்ளார்.
இந்தியாவின் இரும்புமனிதரான சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக உலகிலேயே மிக உயர்ந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் நர்மதா அணைக்கு முன்னால் சாதுபேட் என்று அழைக்கப்படும் ஆற்று தீவில் இச்சிலை அமைந்துள்ளது. இச்சிலையின் உயரம் 182 மீட்டர். இந்த சிலையை 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்.
இதன் பிறகு இந்த சிலையை காண நாடு முழுவதும் இருந்து மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்தநிலையில் இந்த சிலையை விற்பனை செய்வதாக கூறி விஷமி ஒருவர் ஓஎல்எக்ஸில் விளம்பரம் செய்துள்ளார்.
30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறி ஓஎல்எக்ஸ் ஆன்லைன் விற்பனை தளத்தில் அவர் விளம்பரம் தந்துள்ளார். இதனை உறுதிப்படுத்தாமல் அந்த இணையதளமும் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் தற்போது வெளியானதை தொடர்ந்து நர்மதா மாவட்டம் கேவேடியா காவல்நிலையத்தில் உள்ளூர் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை ஆணையர் நீலேஷ் துபே கூறுகையில் ‘‘இந்த விளம்பரத்தை ஓஎல்எக்ஸ் நிறுவனமும் உறுதிப்படுத்தாமல் வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ எனக் கூறினார்.