Published : 06 Apr 2020 07:05 AM
Last Updated : 06 Apr 2020 07:05 AM

கரோனா பாதித்த முதிய தம்பதியரை பராமரித்தபோது தொற்றுக்கு ஆளான கேரள செவிலியர் பூரண நலம்- மீண்டும் பணிக்கு திரும்ப விருப்பம்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் செவிலியர் ரேஷ்மாவை மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் வழியனுப்பி வைத்தனர்.

திருவனந்தபுரம்

இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய இளைஞரிடம் இருந்து அவரது 93 வயது தாத்தாவுக்கும்அவரது மனைவி 88 வயதான பாட்டிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

இவர்கள் உட்பட அந்த இளைஞரின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேரும் தொற்றுக்கு ஆளானார்கள். அனைவரும் குணமடைந்தநிலையில், முதிய தம்பதியர்கள் இருவருக்கும் கோட்டயம் அரசுமருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஏற்கெனவே பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த அந்த தம்பதியர், கேரள சுகாதாரத் துறையின் திட்டமிட்ட சிகிச்சை முறையால் மீண்டு வந்தனர். வயதானவர்களுக்கு தொற்று ஏற்பட்டால் மீள்வது கடினம் என்ற கருத்து நிலவி வரும் நிலையில், கரோனா பாதிப்பில் இருந்து முதியவர்களும் மீள முடியும் என்ற தன்னம்பிக்கையை கேரளா ஏற்படுத்தியது.

அதேநேரம், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் இருந்த செவிலியர் ரேஷ்மா மோகன்தாஸ் கரோனா தொற்றுக்கு ஆளானார். வைரஸ் பாதித்த முதல் சுகாதாரப் பணியாளர் இவர்தான். தீவிரசிகிச்சைக்குப் பிறகு அவர் பாதிப்பில் இருந்து முழுமையாக மீண்டார். இதனால் மகிழ்ச்சியடைந்த மருத்துவமனை ஊழியர்கள், அவரை கொண்டாட்டத்தோடு வழியனுப்பி வைத்தனர்.

தற்போது 14 நாள் தனிமையில் இருக்கும் ரேஷ்மாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்தி இருக்கிறார் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா. அப்போது அவரிடம், ‘தனிமைப்படுத்தல் முடிந்ததும், மீண்டும் கரோனா வார்டில்பணியாற்ற நிச்சயம் வருவேன்’ எனக் கூறியிருக்கிறார். இதைக்கேட்ட அமைச்சர் நெகிழ்ந்துபோனார். இதனால் இப்போது கேரளாவே ரேஷ்மாவை கொண்டாடி வருகிறது.

ரேஷ்மா மோகன்தாஸுக்கு எர்ணாகுளம் மாவட்டத்தின் திருவங்குளம் பூர்வீகம். அவரது கணவர் உன்னிகிருஷ்ணன் ஒருபொறியாளர். தற்போது வீட்டில்தனிமையில் இருக்கும் ரேஷ்மாவிடம் மீண்டு வந்த அனுபவம் குறித்து ‘இந்து தமிழ்' நாளிதழ் சார்பில் பேசினோம். அப்போது அவர் நம்மிடம் பகிர்ந்தது:

முதிய தம்பதிகள் இருவரது நிலையும் மிக மோசமாக இருந்தது. கரோனா சிகிச்சையில் நோயாளியிடம் குறிப்பிட்ட இடைவெளி விட்டு இருக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் முக்கியமானது. ஆனால் தனித்து இயங்க முடியாத நிலையில் இருந்த முதியவர்கள் விஷயத்தில் அதற்கு சாத்தியம் மிகக்குறைவு. கரோனா வார்டில் தினசரி 4 மணி நேரமாவது அவர்களிடம் நெருங்கி இருக்க வேண்டிய தேவை இருந்தது. செவிலியர் பணியும் ஏறக்குறைய அம்மா மாதிரிதான். சிலநேரம் நோயாளிகளை பிள்ளையப்போல் பார்க்க வேண்டும். அந்த முதியவர்களையும் அப்படித்தான் அணுகினேன். தனித்து இயங்க முடியாத அவர்களுக்கு ஆற்றுப்படுத்துதலும் உதவியும் செய்ய வேண்டி இருந்தது.

இந்நிலையில்தான் மார்ச் 22-ம் தேதி திடீரென எனக்கு மூக்கில் இருந்து நீர் தொடர்ச்சியாக வடியத்தொடங்கியது. சிறிதுநேரத்தில் தலைவலி, உடல்வலி, குரல் வித்தியாசப்பட்டு காய்ச்சலும் தொடங்கியது. உடனே தனிமைப்படுத்திய மருத்துவர்கள், 23-ம் தேதிரத்த மற்றும் சளி மாதிரி சோதனையில் கரோனா உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து அதே மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கியது. நண்பர்களும் சக செவிலியர்களும் வீடியோ கால் மூலம் கணவரும் தொடர்ந்து பேசினர். குடும்ப உறவுகளின் அழைப்பும் ஆறுதலாக இருந்தது.

ஒருநாள் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜாவும் அழைத்துப் பேசினார். நான் நடிகை மஞ்சுவாரியரின் தீவிர ரசிகை. இந்நிலையில் திடீரென அவரும் என்னை போனில் அழைத்து, ‘சிகிச்சையளித்த வகையில் கரோனாவை பிடித்திருக்கிறீர்கள். சீக்கிரம் மீண்டு வருவீர்கள். உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன்’ எனச் சொன்னார். நெகிழ்ச்சியாக இருந்தது.

தனிமை வார்டில் இருந்த எனக்கு, முன்னணி வார இதழ்கள் வாசிக்க கிடைத்தன. எழுதும் பழக்கமும் இருந்ததால், இந்த தனிமையை பயன்படுத்தி ‘விழிக்காத வண்ணக் கூட்டுக்காரன்’ என்னும் சிறுகதையை எழுதி முடித்தேன். 12 நாட்களில் தொற்றில் இருந்து மீண்டு விட்டேன். சுவாசப் பிரச்னையும் எதுவும் இல்லை.

தினசரி உணவாக காலையில் ஆப்பம், 11 மணிக்கு பழவகைகள், எழுமிச்சை ஜூஸ், மதியம் அதிக காய்கறிகள் சேர்த்த கேரள உணவு, இரவுக்கு சப்பாத்தி என சத்தான உணவு கிடைத்தது. எனவே, திடகாத்திரமான உடலும் தன்னம்பிக்கையும் இருந்தால் கரோனாவை வென்று விடலாம். தொற்றில் இருந்து மீண்டவள் என்னும் முறையில் நான் வைக்கும் ஒரே கோரிக்கை 'தயவுசெய்து வீட்டை விட்டு யாரும் வெளியில் வராதீர்கள்’ என்பதுதான். இவ்வாறு கூறி முடித்தார்.

மனிதநேயத்துடன் தனது அர்ப்பணிப்புமிக்க பணியாலும் அதனால்தனக்கு ஏற்பட்ட பாதிப்பை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டதாலும் கரோனா அச்சத்தை விரட்டியடிக்கும் அடையாளமாக மிளிர்கிறார் செவிலியர் ரேஷ்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x