

லாக்டவுடன் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் வெளியில் வரமுடியாத சூழ்நிலையில் அவர்கள் வீடு தேடி கடைகளே செல்லும் மொபைல் சூப்பர்மார்க்கெட்டுகள் கேரளாவில் இயங்கத் தொடங்கியுள்ளன.
மக்கள் தாங்களாகவே சமூக இடைவெளியின் அவசர அவசியத்தை உணர்ந்து வீட்டிலேயே உள்ளனர்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நிறுவனங்கள் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன.
அவர்களின் இக்கட்டான சூழ்நிலையை உணர்ந்துள்ள கேரள மாநில கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு லிமிடெட் தங்களது விற்பனை அங்காடியான திரிவேணி சூப்பர்மார்க்கெட்டை மக்கள் வாழும் வீட்டைநோக்கி கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ளனர். இதற்காக மொபைல் சூப்பர்மார்க்கெட்டை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் உள்ள 12 மையங்களிலிருந்தும் நான்கு சக்கர வாகனங்களில் மொபைல் சேவை தொடங்கப்படுகிறது. வாகனங்களில் சென்று வீடுதோறும் பொருட்களை வழங்கும் முறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இதுகுறித்து திருவனந்தபுரம் குடியிருப்பாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பட்டோம் சசிதரன் நாயர் கூறுகையில், மொபைல் சூப்பர் மார்க்கெட் வாகனங்ககளில்மூலம் மொபைல் சூப்பர் மார்க்கெட் வீடு தேடி வருவது பயனுள்ளதாக இருக்கிறது.
குடியிருப்பு பகுதிகளுக்கே சூப்பர் மார்க்கெட்டுகள் வருவது லாக் டவுன் காலத்து சிரமத்தைப் போக்கும் வகையில் உள்ளது. திரிவேணி சூப்பர்மார்க்கெட் அதிகாரிகள் நுகர்வோருக்கு அலைச்சலை தவிர்த்து உதவிகரமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். வாங்கும் போது சமூக தொலைவு பராமரிக்கப்படுவதை உறுதி செய்வதற்காக குடியிருப்பாளர்கள் சங்கங்கள் இணைந்துள்ளன'' என்றார்.
மக்களிடம் கிடைத்துள்ள வரவேற்பே அடுத்து தேவை கருதி, வாகனங்களில் மொபைல் சூப்பர் நடத்துவது மட்டுமின்றி திரிவேனி ஹோம் டெலிவரி ஆட்கள் மூலம் மோட்டார் சைக்கிள்களில் ஹோம் டெலிவரி நடத்தத் தொடங்கியுள்ளதாக நுகர்வோர் மண்டல மேலாளர் டி.எஸ்.சிந்து தெரிவித்தார்.