

‘‘குற்றவாளிகளின் தண்டனையை சஸ்பெண்ட் செய்வதற்கோ அல்லது மன்னித்து விடுதலை செய்வதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது’’ என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன் உள்ளிட்ட 7 பேரை தமிழக அரசு விடுதலை செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ராஜேஷ் திரிவேதி ஆஜராகி வாதிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
குற்றவாளிகளுக்கு விதிக்கப் பட்ட தண்டனையை சஸ்பெண்ட் செய்வதற்கோ, மன்னித்து விடுதலை செய்வதற்கோ மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட முடியாது. குற்றவாளிகளை விடுவிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்குதான் உள்ளது என்று கூறுவது மாநில அரசின் அதிகாரங்களை நசுக்குவது போலாகும்.
தண்டனைக் குறைப்பு என்பது சிறைக் கைதிகளின் நன்னடத் தையை பொறுத்தது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளியிடம் இருந்து விண்ணப்பம் வரவேண்டும் என்று அரசு காத்திருக்க தேவையில்லை. குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படி சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. குற்றவாளியின் தண்டனையை குறைக்கவோ அல்லது முழுவதும் ரத்து செய்யவோ மாநில அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது. இதில் மத்திய அரசு தலையிட கூடாது.
சட்டசபையில் எம்எல்ஏக்கள் ஒருமனதாக தீர்மானம் ஒன்றை கொண்டு வரும்போது அதை நிறைவேற்றுவது அரசின் கடமை. ஆனால், சிபிஐ வழக்கு என்பதால் மத்திய அரசின் அனுமதி பெறவேண்டும் என்று கூறுவது மாநில அரசுகளின் அதிகாரத்தை முடக்குவதாகும்.
இவ்வாறு ராஜேஷ் திரிவேதி வாதாடினார். வழக்கு இன்றும் விசாரணைக்கு வருகிறது.