

கரோனா வைரஸ் பெருந்தொற்று நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் முதல்முறையாக எதிர்க்கட்சித்தலைவர்களுடனும், முன்னாள் குடியரசுத் தலைவர்களுடனும் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகச் சமூகத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்புநடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் லாக்டவுன் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து நடைமுறைப்படுத்தியுள்ளது. இருப்பினும் கரோனா வரைஸுக்கு இதுவரை 74 பேர் உயிரிழந்துள்ளனர் 3,300 பேருக்கு மேல் ப ாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி 21 நாட்கள் லாக்டவுன் திட்டத்தை அறிவிக்கும் முன் எதிர்க்கட்சியினரை அழைத்து ஆலோசனை நடத்தவில்லை. முக்கியமான முடிவுகள் எடுக்கும் போது அவர் தன்னிச்சையாக செயல்பட்டுவிட்டார், மாநிலங்களைக்கூட ஆலோசிக்கவில்லை, அவர்கள் தயாராக இருக்கிறார்களாக என்று கூட கேட்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொலி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.அப்போது 21 நாட்கள் எவ்வாறு கடைபிடிக்கப்படுகிறது என்பது குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும் விளையாட்டு துறை பிரபலங்களுடனும் மோடி ஆலோசனை நடத்தினார்
இந்த சூழலில் வரும் 14-ம் ேததியுடன் 21 நாட்கள் லாக்-டவுன் முடிகிறது. ஆனால், அது குறித்து பல்வேறு ஊடகங்களிலும் பலவாறு தகவல்கள் வந்துள்ளன.லாக் டவுன் நீட்டிக்கப்படலாம், சிறிது இடைெவளி கொடுத்து மீண்டும் வரலாம் என்றெல்லாம் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் முன்னாள் குடியரசுத்தலைவர்கள் பிரணாப்முகர்ஜி, பிரதிபா பாட்டீல் ஆகியோரிடம் தொலைப்பேசியில் பிரதமர் மோடி பேசினார்.
அதேபோல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருடன் தொலைப்பேசியில் பேசிய பிரதமர் மோடி கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்தியஅரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்,21 நாட்கள் லாக்டவுன் குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சமாஜ்வாதிக்கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ஷிரோன்மணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் ஆகியோரருடன் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.