

ஞாயிறு இரவு 9 மணிக்கு என்ன செய்ய வேண்டுமென்பது அவரவர் தனிப்பட்ட விஷயம்; 9 மணிக்கு நான் தூங்கப் போய்விடுவேன், மற்றபடி கரோனாவை சமாளிக்க போராடுவோம், அரசியல் யுத்தம் வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக ஒற்றுமையின் அடையாளமாக ஞாயிறு மாலை 9 மணிக்கு மின் ஒளி விளக்குகளை அணைக்குமாறு பிரதமர் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்கும் மக்கள் ஒருபக்கம் டெல்லி போன்ற நகரங்களில் காலையிலிருந்து அகல்விளக்குகளின் விற்பனையை அதிகரித்து வருகின்றனர். கொல்கத்தாவில் மெழுகுவர்த்தி விற்பனை களைகட்டியுள்ளது.
பிரதமரின் வேண்டுகோளை நாட்டின் பெரும்பாலான மக்கள் வரவேற்றுள்ளனர். ஞாயிறு இரவு 9 மணி 9 நிமிடத்தை பிரதமர் தேர்ந்தெடுக்க காரணம் என்ன என்பதை அவரவர் புரிந்துகொண்ட விதத்தில் ஒவ்வொரு விளக்கம் அளித்துவரும் வேளையில் இன்னும் பலரோ ஞாயிற்றுக்கிழமை மாலை மின் விளக்குகளை அணைக்கப் போவதில்லை என்றும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சாதாரணமாக போன வாரம் வரை 10 ரூபாய்க்கு விற்ற மெழுகுவர்த்திகள் கொல்கத்தாவில் இன்று 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிவருகிறது.
பிரதமரின் வேண்டுகோள் குறித்த கேள்விக்கு பதிலளித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இது “தனிப்பட்ட விஷயம்” என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“அவர் உங்களிடம் சொன்னாரென்றால்... நீங்கள் அதை செய்யுங்கள். நீங்கள் ஏன் என்னிடம் கேட்கிறீர்கள்? நான் என்ன செய்ய வேண்டும் என்று நான் தான் கூற முடியும்… பிரதமர் என்ன செய்ய வேண்டும் என்று அவர் கூறுவார்.
மேலும் மற்றவர்களின் விஷயங்களில் நான் ஏன் தலையிட வேண்டும்? நான் கரோனா வைரஸை சமாளிக்க வேண்டுமா, அல்லது ஒரு அரசியல் யுத்தம் வெடிக்க வேண்டுமா? தயவுசெய்து ஒரு அரசியல் போரைத் தூண்ட வேண்டாம்.
பிரதமர் கூறியது நல்லது என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் அதைக் கடைப்பிடிக்கவும். நான் உணர்ந்தால், நான் தூங்குவேன், அதை செய்வேன். இது ஒரு தனிப்பட்ட விஷயம்.''
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
நாடு முழுவதும் விழித்திருக்கும் நேரம்
இதற்கு பதிலடியாக கருத்தைத் தெரிவித்த மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறுகையில், "பிரதமரின் வேண்டுகோள் நாட்டின் நிலைமை அனைவருக்கும் சுட்டிக்காட்டுவதற்கும் ஒற்றுமைக்குமானது. நமது முதல்வரோ தூங்கப் போவதாக கூறுகிறார். ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு அவர் தொடர்ந்து தூங்கலாம். ஆனால் நாடு முழுவதும் அப்போது விழித்திருக்கும்” என்றார்.