

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் 21 நாட்கள் லாக்-டவுன் ஏப்ரல் 15ம் தேதி வாபஸ் பெறப்படும், அதன் பிறகு பொது இடங்களில் கூட்டம் சேராமல் இருப்பதை உறுதி செய்ய நடைமுறைகள் தேவை என்று உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மாநில எம்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், லாக்டவுனுக்குப் பிறகு கூட்டம் சேராமல் இயல்பு நிலை திரும்புவதற்கான ஆலோசனைகளைக் கேட்டறிந்தார்.
உ.பி.முதல்வர் யோகி, இதனை உ.பி. மாநிலத்தில் லாக்-டவுன் அகற்றப்படும் என்ற விதத்தில் கூறினாரா அல்லது நாடு முழுதுமே லாக் டவுன் அகற்றப்படும் என்ற விதத்தில் கூறினாரா என்பது தெளிவாக இல்லை.
பிரதமர் மோடி அன்று மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசித்த பிறகு உ.பி. முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
எம்.பி.க்களிடம் யோகி ஆதித்யநாத் கூறும்போது, “ஏப்ரல் 15ம் தேதி லாக் டவுன் வாபஸ் பெறப்படும். ஆனால் கூட்டம் சேர்வதை நாம் தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இதில் உங்கள் ஒத்துழைப்பும் உதவியும் தேவை. லாக் டவுனை நீக்கிய பிறகு கூட்டம் சேரத் தொடங்கினால் இத்தனை நாட்கள் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாகி விடும், எனவே இதற்கான நடைமுறைகளை நாம் வகுத்தெடுக்க வேண்டும், அதற்காகவே ஆலோசனைகளுக்காக உங்களை அழைத்துள்ளேன்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய இணை அமைச்சர் மஹேந்திர நாத் பாண்டே, பிடிஐ செய்தி ஏஜென்சியிடம் கூறும்போது, “நாங்கள் உ.பி. முதல்வரிடம் பேசினோம் அப்போது அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பற்றி கூறினார், லாக்-டவுன் போது மாநில அரசு செய்தவற்றைக் கூறினார்” என்றார்.