

கரோனா வைரஸ் நாட்டில் பரவி வரும் நிலையில் அதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் சமூக ஊடகங்களில் வரும் கரோனா வைரஸ் குறித்த செய்திகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என ஆய்வு நடத்தப்பட்டது
கரோனா வைரஸ் குறித்த இந்த ஆய்வை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ராஷ்ட்ரசாந்த் துகோஜி மகாராஜ் பல்கலைக்கழகம் நடத்தியுள்ளது. மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை ஆய்வு நடத்தப்பட்டு முடிவுகளை பல்கலைக்கழகம் அறிவித்தது.
இந்த ஆய்வி்ல் மாணவர்கள் , அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தொழிலதிபர்கள், சுயதொழில் செய்வோர், வர்த்தகம் செய்வோர், வீ்ட்டில் இருக்கும் பெண்கள் ஆகியோரிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன.
இதில் பெரும்பலானோர் கரோனா வைரஸ் குறித்த நிகழ்வுகளை தாங்கள் நாளேடுகள் மூலமும், இ-பேப்பர் மூலமும் தெரிந்து கொள்வதாகத் தெரிவித்தனர்.
இந்தஆய்வுகுறித்து நாக்பூர் பல்கலைக்கழகத்தின் தகவல்தொடர்பியல் துறை தலைவர் மோயிஸ் மமன் ஹக் கூறியதாவது:
“கரோனா வைரஸ் குறித்து சமூக ஊடகங்களில் வரும் செய்திகளின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு சமூக ஊடகங்களில் கரோனா வைரஸ் குறித்து வரும் செய்திகள் 50 முதல் 80 சதவீதம் போலியானவை என்று 39.1 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 80 சதவீதம் செய்திகளும் போலியானவை என 10 சதவீதம பேர் தெரிவித்தனர்.
இதன் மூலம் மக்கள் போலிச் செய்திகள் குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதை அறிய முடிகிறது. மக்கள் உண்மைச் செய்திகளையும், போலியானவற்றையும் பிரித்துப்பார்க்க தெரிந்துள்ளனர்
எப்படி ஒரு செய்தி பொய்யானது என்பதை தெரிந்து கொள்கிறீர்கள் என்று கேட்டபோது, அதற்கு 36.5 சதவீதம் மக்கள் அந்த செய்தி குறித்து அரசு சார்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா அல்லது தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக என விசாரிப்போம் எனத் தெரிவித்தனர்.
மேலும் சுகாதாரத்துறையினர், போலீஸார், உள்ளாட்சி நிர்வாகம், அரசு சார்பில் விளக்கம் ஆகியவற்றை எதிர்பார்த்து தெளிவுபடுத்திக்கொள்வோம் எனத் தெரிவித்தனர்
கரோனா வைரஸ் குறித்து ஊடகங்கள் மிகைப்படுத்தி ெசய்திகள் ஏதும் வெளியிடுகிறதா என்ற கேள்விக்கு, “ 34.9 சதவீம் பேர் ஊடகங்கள் நடுநிலையுடன் செய்திகள் வெளியிடுவதாகத் தெரிவித்தனர். 32.7 சதவீதம் பேர் ஊடகங்கள் மிகைப்படுத்துகின்றன என்றும், 32.7 சதவீதம் பேர் ஊடகங்கள் மிகைப்படுத்தவில்லை எனத் தெரிவித்தனர்
இப்போதுள்ள சூழலில் மக்கள் அதிகமான அளவு தொலைக்காட்சி, சமூக ஊடங்களைப் பார்த்து செய்திகளை உடனுக்குடன் அறிந்தாலும், அதில் உள்ள நம்பகத்தன்மையை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். இந்த லாக்டவுன் காலகட்டத்தில் டிஜிட்டல் ஊடகங்கள் வாயிலாக செய்திகள் பார்ப்பது 5.8 சதவீதம் அதிகரித்துள்ளது,
தொலைக்காட்சி மூலம் செய்திகள் பார்ப்பதும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் நாளேடுகள் மக்கள் கைகளில் கிடைப்பது பெரும் சிரமமாக இருப்பதால், மக்கள் இ-பேப்பர், நியூஸ்வெப் போர்ட்டல்கள் மூலம்தான் செய்திகளைப் படிக்கின்றனர்
இவ்வாறு பேராசிரியர் ஹக் தெரிவித்தார்