

நாடு முழுவதும் கரோனா வைரஸ்பரவுவதை தடுக்கும் வகையில்ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளதால், வழிபாட்டு தலங்கள் உட்பட எந்த இடத்திலும் மக்கள் கூடுவதை போலீஸார் தடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று முன் தினம் ஹூப்ளியில் உள்ள அரலிகட்டி மசூதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர். அப்போது இஸ்லாமிய தலைவர்கள் அட்லாஃப் ஹல்லூர்,முகமது யூசுப் கைராட்டி ஆகியோருடன் அங்கு வந்த காவல் ஆய்வாளர் எம்.கே.காலே, கரோனா வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் தொழுகையை நிறுத்திவிட்டு கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இதை ஏற்க மறுத்த இஸ்லாமியர்கள் சிலர் போலீஸார் மற்றும் இஸ்லாமிய தலைவர்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் காவல் ஆய்வாளர் எம்.கே.காலே, பெண் காவலர் சுசீலா உட்பட 4 போலீஸாரும், இஸ்லாமிய தலைவர்கள் அட்லாஃப் ஹல்லூர், முகமது யூசுப் கைராட்டி உள்ளிட்டோரும் காயமடைந்தனர். பின்னர் போலீஸார் தடியடி நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இதேபோல ஷிமோகா மாவட்டம் கெசுவினகட்டாவில் உள்ள மசூதியிலும் சம்பவம் நடந்தது. இது தொடர்பாக போலீஸாரை பணி செய்ய விடாமல் தடுத்தது, கொள்ளை நோய் காலத்தில் அலட்சியமாக செயல்பட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளில் 77 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.