

கரோனா வைரஸ் அச்சுறுத்தலை சமாளிக்க நாடு முழுவதும் அத்தியாவசிய மருத்துவ சாதனங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
கரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக விரிவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்த, அதிகாரம் அளிக்கப்பட்ட 11 குழுக்களை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு குழுக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தனிப்பட்ட பாதுகாப்பு சாதனங்கள் (பிபிஇ), முக கசவங்கள், கையுறைகள், வென்டிலேட்டர்கள் போன்ற அனைத்து அத்தியாவசிய மருத்துவ சாதனங்களும் போதிய அளவில் கிடைப்பதை உறுதிப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.
பிரதமர் அலுவலகம் தகவல்
ட்விட்டரில் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட செய்தியில், “கரோனா வைரஸ் தொற்றுக்கு கிசிச்சை அளிக்கும் மருத்துவமனைகள், நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்துவதற்கான வசதிகள், நோய் கண்காணிப்பு, பரிசோதனை, தீவிர சிகிச்சை பயிற்சி என நாடு முழுவதும் இந்த நோய்க்கு எதிரான தயார் நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆய்வுசெய்தார்” என கூறப்பட்டுள்ளது.