

கரோனா வைரஸுக்கு எதிரான பணியில் போலீஸார் இறந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. இம்மாநிலத்தில் நேற்று 19 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இம்மாநிலத்தில் கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 537 ஆக உயர்ந்துள் ளது. மகாராஷ்டிராவில் கரோனா வைரஸுக்கு இதுவரை 19 பேர்பலியாகியுள்ள நிலையில் 50நோயாளிகள் குணமடைந்து, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மகாராஷ்டிர மக்கள் ஊரங்கை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று முதல்வர் உத்தவ் தாக்கரே நேற்று கேட்டுக்கொண்டார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவுக்கு கடைப்பிடிக்கிறார்கள் என்பதை பொறுத்தே ஏப்ரல் 14-ம்தேதிக்கு பிறகு ஊரடங்கு நீக்கப்படும். கரோனா தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
இதனிடையே கரோனா வைரஸுக்கு எதிரான பணியில் போலீஸார் உயிரிழக்க நேரிட்டால், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
மகாராஷ்டிர அரசின் அறிவிப்பை தொடர்ந்து பஞ்சாப் அரசு நேற்று போலீஸார் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கான காப்பீடு வழங்கப்படும் என அறிவித்தது. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் முன்னணி வீரர்களாக உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், துணை மருத்துவ ஊழியர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதற்கான அறிவிப்பை கடந்த மார்ச் 26-ம் தேதி வெளியிட்டார்.
இதையடுத்து கரோனாவுக்கு எதிரான போரில் மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என டெல்லிமுதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார்.
இந்நிலையில் கரோனா வைரஸுக்கு எதிரான போரில்உயிரிழக்க நேரும் போலீஸாரையும் கவுரவிக்கும் வகையில் அவர்களின் குடும்பத்தினர் ரூ.50 லட்சம் இழப்பீடு பெறுவதை மகாராஷ்டிரா மற்றும் பஞ்சாப் அரசுகள் உறுதி செய்துள்ளன.