

நாடு முழுவதும் 22 ஆயிரம் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் பங்கேற்ற 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மத்திய அரசு சந்தேகப்படுகிறது.
தப்லீக் ஜமாத்தில் குழுமியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை வெளியேற்றியபோதுதான் அவர்களில் பலருக்கும் கரோனா இருப்பு உறுதியானது. இதையடுத்து மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என மத்திய அரசு சந்தேகித்து அவர்களைத் தேடும் பணியை முடுக்கியது. இதுவரை 22 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சலிலா ஸ்ரீவஸ்தவா இன்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''டெல்லி தப்லீக் மாநாட்டில் பங்கேற்றவர்களையும், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களையும் கண்டுபிடிக்க மாநில அரசுகளுடன் இணைந்து, மத்திய அரசு மிகப்பெரிய முயற்சிகளிலும், நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது.
நாடு முழுவதும் 22 ஆயிரம் தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், அவர்களோடு தொடர்புடையவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்
தற்போது நடக்கும் லாக்-டவுன் 24 மணிநேரமும் கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பணியில் தேசிய பேரிடர் மேலாண்மை படை, மத்திய ஆயுதப்படை ஆகியவற்றில் இருந்து 200 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர்.
3 வார லாக்-டவுனுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் சுமுகமாகச் செல்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய சேவைகள், பொருட்கள் கிடைப்பது மனநிறைவாக இருக்கிறது.
அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் எந்தவிதமான இடையூறும் இருக்கக்கூடாது எனத் தெரிவித்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உள்துறைச் செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார்
முதல்கட்டமாக தேசிய பேரிடர் மேலாண்மை நிதி மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தின் மூலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யலாம்''.
இவ்வாறு ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார்.