

17 மாநிலங்களைச் சேர்ந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 1, 023 நோயாளிகள் டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லீக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் நடந்த மத வழிபாடு மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் உள்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகக் கூறப்பட்டது.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் நாட்டில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட பின்பும் இவர்கள் தப்லீக் ஜமாத்தில் தங்கி இருந்தது கண்டு அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது, நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமான கரோனா நோயாளிகள் இங்கு இருந்ததாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்லீக் ஜமாத் இமாம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினர் 500 பேரை போலீஸார் அடையாளம் கண்டுபிடித்து மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தியுள்ளனர். இந்த மாநாட்டில் பங்கேற்ற பலரால்தான் கடந்த சில நாட்களில் நாட்டில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதாக மத்தியஅரசு சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் நிருபர்களுக்கு இன்று டெல்லியில் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு வருகிறது. 17 மாநிலங்களில் கரோனா வைரஸ் நோயாளிகள் 1,023 பேர் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள். நாட்டில் உள்ள கரோனா நோயாளிகளில் 30 சதவீதம் பேர், ஒரு குறிப்பிட்ட இடத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள்.
இப்போது 2,902 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது, வெள்ளிக்கிழமையில் இருந்து 601 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 68 பேர் கரோனா வைரஸுக்கு இறந்துள்ளனர். இதில் நேற்று முதல் 12 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. 183 பேர் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்துள்ளனர்.
17 மாநிலங்களில் நடத்தப்பட்ட தீவிர தேடுதலில் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பலர் சிக்கியுள்ளனர். இவர்களில் பெரும்பலாானோருகக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான போில் வெற்றி பெற விழிப்புணர்வு அவசியம். யாரும் அச்சப்படத் தேவையில்லை.
கரோனா நோயாளிகளில் 0 வயது முதல் 20 வயது வரை 9 சதவீதம் நோயாளிகள் இருக்கின்றனர். 21 வயது முதல் 40 வயது வரை 42 சதவீதம் நோயாளிகளும், 41 வயது முதல் 66 வயது வரை 33 சதவீதம் பேரும், 60 வயதுக்கு மேல் 17 சதவீத நோயாளிகளும் உள்ளனர்''.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.