கான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம்  தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அத்துமீறல் செய்வதாகப் புகார்

கான்பூர் மருத்துவமனை ஊழியர்கள், செவிலியர்களிடம்  தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அத்துமீறல் செய்வதாகப் புகார்
Updated on
1 min read

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் லாலா லஜபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள், மருத்துவமனை ஊழியர்களிடமும், செவிலியர்களிடமும் வரம்பு மீறி அத்துமீறலில் ஈடுபடுவதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதத் தொடக்கத்தில் டெல்லி நிஜாமுதீனில் உள்ள தப்லீக் ஜமாத் சார்பில் நடத்தப்பட்ட மத வழிபாடு மாநாட்டில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். கரோனா வைரஸைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்பும் தப்லீக் ஜமாத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்ததால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அப்போது அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் ஏராளமானோருக்கு கரோனா வைரஸ் அறிகுறி இருப்பதும், பலருக்கு கரோனா வைரஸ் தாக்கப்பட்டிருப்பதும் தெரியவந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும், தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு மாநில வாரியாகத் தேடுதல் நடத்தப்பட்டது.

இதில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றது தெரியவந்து அவர்களை சுயதனிமைக்கு உட்படுத்தியுள்ளனர். இதில் கான்பூர் நகரில் உள்ள லாலா லஜபதி மருத்துவமனையில் தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த 22 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். இதில் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் கான்பூர் மருத்துவமனைியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மருத்துவர்களிடம் அத்துமீறுவதும், செவிலியர்கள், ஊழியர்களிடம் அவதூறாகப் பேசுவதாவும் இருக்கின்றனர்.

இதுகுறித்து மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி அசோக் சுக்லா நிருபர்களிடம் கூறுகையில், “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 22 பேரில் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த ஜமாத் உறுப்பினர்கள் சிகிச்சைக்கு ஒத்துழைக்க மருத்துவர்களுக்கு மறுக்கின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள் சிகிச்சை அளிக்க அருகே சென்றால் அவர்கள் மீது எச்சில் துப்புவது, கைகளில் எச்சில் துப்பி பொருட்கள் மீது தடவுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

மருத்துவமனையில் எச்சில் உமிழக்கூடாது என்று கூறினாலும் அவர்கள் அதை மதிப்பதில்லை. விதிமுறைகளையும் பின்பற்றுவதில்லை. மருத்துவர்களிடம் அவதூறாகப் பேசுவதும், தவறாகவும் நடக்கிறார்கள். இதில் போலீஸார் தலையிட்டால்தான் இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண முடியும் . இவர்களின் தவறான நடத்தையால் பெண் செவிலியர்களை இவர்களுக்கு சிகிச்சையளிக்க அனுப்புவதை நிறுத்திவிட்டோம். இது தொடர்பாக போலீஸாருக்கும், மருத்துவமனை உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்துள்ளோம்” எனத் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in