

கோவிட்-19 சிகிச்சைக்கான 138 டன் உபகரணங்களை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் லைஃப் லைன் உதான் விமானங்கள் நாடு முழுவதும் பறந்துசென்று விநியோகம் செய்துள்ளன. இதற்காக 107 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.
உலகெங்கும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான உயிர் பலிகளை ஏற்படுத்தி கோர தாண்டவத்தை நடத்திவரும் கரோனா வைரஸ் இந்தியாவில் ஊடுருவியுள்ள நிலையில் அதன் பரவலைக் கட்டுப்படுத்த தேசம் முழுவதும் லாக்-டவுன் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கரோனா பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 68.
கரோனா வைரஸ் சிகிச்சைக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஒருபக்கம் எடுக்கப்பட்ட போதிலும் மாநிலங்கள் எங்கும் முன்கூட்டியே சிகிச்சைக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள், ஸ்டேடியங்கள், கல்யாண மண்டபங்கள், கல்லூரிகள் என பல்வேறு விசாலமான இடங்களிலும் சிகிச்சைக்கான பணியிடங்கள் தேர்வுசெய்யப்பட்டு மருத்துவமனைகளாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் கரோனா சிகிச்சைக்காக நாட்டின் பல்வேறு மையங்களுக்குத் தேவையான அளவுக்கு மருத்துவ உபகரணங்களும் சரக்கு விமானங்களில் கொண்டுபோய் சேர்க்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று கூறியுள்ளதாவது:
''சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட லைஃப்லைன் உதான் முன்முயற்சியின் கீழ், ஏப்ரல் 3 ஆம் தேதி வரை 107 விமானங்கள் 138.81 டன் மருத்துவ சரக்குகளை நாடு முழுவதும் கொண்டு செல்ல இயக்கப்பட்டன.
லைஃப்லைன் உதான் சரக்கு விமானங்கள் மூலம், கோவிட்-19 தொடர்புடைய என்சைம்கள், மருத்துவ உபகரணங்கள், சோதனைக் கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் (பிபிஇ) முகக்கவசங்கள், கையுறைகள் கொண்டு செல்லப்பட்டன.
லைஃப்லைன் உதான் திட்டத்தில் ஏர் இந்தியா, அலையன்ஸ் ஏர், இந்திய விமானப்படை ஐ.ஏ.எஃப் மற்றும் பவன் ஹான்ஸ் ஆகிய விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இது மட்டுமின்றி இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் மற்றும் ப்ளூ டார்ட் போன்ற தனியார் விமானங்களும் வணிக அடிப்படையிலேயே மருத்துவ சரக்கு விமான சேவைக்கு இயக்கப்பட்டன''.
இவ்வாறு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.