

கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கும் வகையில் மக்கள் வீட்டில் தயாாரிக்கப்பட்ட முகக் கவசத்தை அணியலாம். அதிலும் வீட்டை விட்டு வெளியேறும்போது முகக்கவசம் அணிந்து செல்லுங்கள் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உலகில் 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும் 68 உயிர்கள் பலியாகியுள்ளன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா வைரஸ் பரவும் வேகத்தைக் குறைக்கவும், தடுக்கவும் 21 நாட்கள் லாக்-டவுனை மத்திய அரசு அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது. மக்கள் அனைவருக்கும் முகக்கவசம் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனால் முகக் கவசத்தின் விலையும் திடீரென உயர்ந்து வருகிறது.
இதனிடையே சமீபத்தில் மத்திய அரசு , வீட்டிலேயே மக்கள் முகக் கவசத்தை எளிய முறையில் தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டிருந்து.
தொடக்கத்தில் கரோனா வைரஸ் பரவிய நேரத்தில் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டியதில்லை. அறிகுறிகள் இருப்போர், தும்மல், ஜலதோஷம் இருந்தால் அவர்கள் அணியலாம் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால், தற்போது கரோனா பரவும் வேகம் அதிகரித்து இருப்பதால் மக்களுக்கு மத்திய அரசு புதிய அறிவுரைகளை வழங்கியுள்ளது.
இதன்படி, “சுவாசக் கோளாறு இல்லாதவர்கள், உடல்நலப் பிரச்சினை இல்லாதவர்கள் கூட வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். முகக்கவசம் வீட்டிலேயே தயார் செய்யப்பட்டிருந்தாலும், துவைத்து மீண்டும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தாலும் அந்த முகக் கவசத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக வீட்டை விட்டு வெளியே போகும்போது முகக்கவசம் அணியாமல் மக்கள் செல்லக்கூடாது. முகக்கவசம் அணிந்து செல்வது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதுகாக்கத் துணைபுரியும்.
அதேநேரம் நேரடியாக கரோனா நோயாளிகளைக் கையாளும் சூழலில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் அவர்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும்.
வீட்டில் முக்கவசம் தயாரித்தால், குடும்ப உறுப்பினர்கள் தனித்தனியாகப் பயன்படுத்த வேண்டும், ஒருவர் பயன்படுத்திய முகக் கவசத்தைத் துவைத்து மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. முகக்கவசம் நன்றாக மூக்கு, வாய்ப் பகுதியை மூடும் வகையில் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
தொடக்கத்தில் அனைவரும் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று மத்திய அரசு கூறி வந்தது. ஆனால், கரோனா வைரஸ் காற்றிலும் பரவக்கூடும், பாதிக்கப்பட்டவர் பேசும்போதும், மூச்சுவிடும் போதும் பரவக்கூடும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தார்கள்.
இதையடுத்து அமெரிக்க அரசும் தங்கள் நாட்டு மக்கள் அனைவரும் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தியது. இந்த சூழலில் மத்திய அரசும் தான் முன்பு தெரிவித்திருந்த அறிவுரைகளை மாற்றி, அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளது.