

மகாராஷ்டிரா மாநிலம்தான் கரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த மாநிலத்தில் புதிதாக 47 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் 19 ஆக உயர்ந்துள்ளது.
மும்பையில் மட்டும் அதிகபட்சமாக 71 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தானே மாவட்டத்தில் 25 பேரும், புனேயில் 11 பேரும், அகமதுநகரில் 3 பேரும், வாஷிம், ரத்னகிரியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் கரோனா நோாயாளிகள் அதிகம் உருவாகக்கூடிய வாய்ப்புள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மும்பை, புனே, நாக்பூர் ஆகியவற்றில் ஆய்வு செய்ய 2,332 குழுக்களை மாநில அரசு அமைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை நிலரவப்படி ராஜாவாடி மருத்துவமனையில் 62 வயதான முதியவர் ஒருவரும், பாலசாகேப் தாக்கரே மருத்துவமனையில் 65 வயது முதியவர் ஒருவரும் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தனர்.
இதுதவிர வாசி பகுதியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது முதியவர், பால்கர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட ஒரு மூதாட்டி ஆகியோரும் உயிரிழந்தனர்.
இன்று காலை நிலவரப்படி புதிதாக 47 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்து 50-க்கும் மேற்பட்டோர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்று வந்த புனே நகரைச் சேர்ந்த 4 பேருக்கும், அகமது நகரைச் சேர்ந்த 2 பேருக்கும், ஹிங்கோலியைச் சேர்ந்த ஒருவருக்கும் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர அரசின் நேற்றைய நிலவரப்படி 38 ஆயிரத்து 398 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், 3,072 பேர் பல்வேறு அமைப்புகள் மூலம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.