

இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்பதால் பிரதமர் மோடியின் அறிவிப்புபடி, நாடுமுழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தேவையின்றி வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று அச்சம் காரணமாக கடைகளுக்கு மருந்து உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக வந்த மக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து வருகின்றனர்.
கடைகளுக்கு முன்பு உரிய வகையி்ல் மக்கள் இடைவெளி விட்டு நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த வட்டங்களில் வரிசைப்படி நின்று மக்கள் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு ஸ்தலங்களும் மூடப்பட்டுள்ளன. கரோனா பரவுவது வேகமாக அதிகரித்து வருவதால் பெருமளவு மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இருப்பினும் இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் கரோனா பாதிப்பு குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
‘‘இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகி வரும் நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2547 ஆக உயர்ந்துள்ளது. இதில் தொற்று கடுமையாக பாதிக்கபட்டோர் எண்ணிக்கை 2322 ஆக உள்ளது. மொத்தம் 162 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக அதிகரித்துள்ளது. ’’ எனத் தெரிவித்துள்ளது.