

டெல்லியில் தப்லீக் ஜமாத் மாநாட்டுக்குச் சென்று திரும்பியவர்களில் 647 பேருக்கு கடந்த 2 நாட்களில் கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லாவ் அகர்வால் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அனைவரும் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பியவர்கள்.
இந்தியாவில் கரோனாவால் இதுவரை 2,301 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 56 பேர் உயிரிழந்துள்ளனர். வியாகிழக்கிழமையிலிருந்து புதிதாக 336 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 157 பேர் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்
கடந்த இரு நாட்களில் 14 மாநிலங்களில் இருந்து 647 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கடந்த மாதத்தில் டெல்லி நிஜாமுதீனில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.
அந்தமான் நிகோபர், டெல்லி, அசாம், இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், தமிழகம், தெலங்கானா, உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம் உள்பட 14 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இதில் பாதிக்கப்பட்டனர். கடந்த சில நாட்களாகத்தான் கரோனா நோயாளிகள் இந்த அளவுக்கு அதிகரித்துள்ளனர்.
மத்திய அரசு லாக்-டவுன் கொண்டுவந்ததன் நோக்கமே, சமூக விலக்கல்தான். அதைக் கடைப்பிடிக்கும்போது கரோனா நோயாளிகள் குறைவான அளவில்தான் அதிகரித்து வந்தனர். கரோனா வைரஸ் என்பது தொற்று நோய் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு தோல்வி ஏற்பட்டால்கூட இதுவரை கரோனாவைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் வீணாகிவிடும்.
இந்தியாவில் கரோனா நோய் குறித்துக் கண்டறிய மொத்தம் 182 பரிசோதனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 130 அரசு ஆய்வுக்கூடம். இதில் அதிகபட்சமாக நேற்று 8 ஆயிரம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.
மத்திய அரசின் ஆரோக்கிய சேது மொபைல் செயலியை இதுவரை 30 மக்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தச் செயலி மூலம் கரோனா குறித்த தகவல்கள், யாரேனும் கரோனா நோயாளிகள் இருந்தால் அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவி்க்க உதவும். புதிதாக யார் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் குறித்து இந்தச் செயலி எச்சரிக்கை விடுக்கும். இந்தச் செயலியை மக்கள் பதிவிறக்கம் செய்வது அவசியம்''.
இவ்வாறு லாவ் அகர்வால் தெரிவித்தார்.