

86 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்களுக்கு உத்தரப்பிரதேச அரசு வெள்ளிக்கிழமையன்று 2 மாத ஓய்வூதியத்தொகையை அவர்கள் கணக்கில் சேர்த்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு அறிக்கையின் படி சுமார் ரூ.871 கோடி தொகை 86 லட்சத்து 71 ஆயிரத்து 781 பயனாளர்களுக்கு ஆன்லைன் மூலம் சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் இல்லத்தில் மேற்கொண்ட நிகழ்ச்சியில் இந்த தொகைப் பரிமாற்றத்தை செய்தார்.
மேலும் வீட்டிலிருந்த படியே வாரணாசி, அலஹாபாத், கோரக்பூர், மொராதாபாத் மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள பயனாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.
மேலும் 27.15 லட்சம் கட்டுமானப் பணியாளர்களின் கணக்குகளுக்கு தலா ரூ.1000 தொகை செலுத்தப்பட்டதையும் தெரிவித்தார்.
இது தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு, அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்கள் மற்றும் லாக்டவுனால் பாதிக்கப்பட்டு வேலையிழந்தோருக்கு ஏப்ரல் 1ம் தேதி முதல் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் தொடங்கியதாக முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இதோடு மட்டுமல்லாமல் 88 லட்சம் எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ தொழிலாளர்கள் கணக்கில் ரூ.611 கோடி தொகை சேர்ப்பிக்கப்பட்டுள்ளது.