

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லாக்-டவுன் அமல்படுத்தப்பட்ட காரணத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் கோரும் மனுவில் மத்திய அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்தியாவுக்குள்ளும் ஊடுருவியுள்ள கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் சமூக இடைவெளி மிக முக்கியம் என்று கூறிய பிரதமர் மோடி கடந்த மார்ச் 24 முதல் 21 நாட்களுக்கு லாக்-டவுனை அறிவித்தார். திடீரென லாக்-டவுன் அறிவிக்கப்பட்டதால் நாடே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கடைகள் அடைக்கப்பட்டன. நிறுவனங்கள் மூடப்பட்டன. போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.
இதனால் வேலை இழந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உண்ண உணவுமின்றி தங்குவதற்குக் கூட இடமின்றி சொந்த ஊருக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. நாட்டின் மிகப்பெரிய நகரங்களிலிருந்து சரியான போக்குவரத்து இல்லாமல் கூட்டம் கூட்டமாக தங்கள் மாநில கிராமங்களை நோக்கி புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நடந்தே செல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேலும், பலர் ஊருக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கும் இடங்களிலேயே பல தன்னார்வலர்களின் ஆதரவில் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் கோரி சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர் மற்றும் அஞ்சலி பரத்வாஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.
அவர்கள் தங்கள் மனுவில், ''நாட்டில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் முயற்சியில் விதிக்கப்பட்ட 21 நாள் லாக்-டவுன் பேரிடர் மேலாண்மை சட்டத்திற்குப் புறம்பானதாகும். எனவே, பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாவது வழங்க வேண்டுமென மத்திய அரசுக்கு அறிவுறுத்தி உடனடி வழிகாட்டுதல் வேண்டும்'' எனக் கோரியிருந்தனர்.
உச்ச நீதிமன்றம் இம்மனுவை இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டது.
இம்மனுவை விசாரித்த நீதிபதி எல்.நாகேஸ்வர் ராவ் தலைமையிலான பெஞ்ச் மற்றும் நீதிபதி தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு ஏப்ரல் 7 ஆம் தேதிக்குள் மத்திய அரசு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.